தமிழ்நாடு

tamil nadu

Exclusive:'மாநில அரசின் கல்வி உரிமையில் ஒன்றிய அரசு நுழைய முயற்சி' - பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!

By

Published : Apr 16, 2023, 9:50 AM IST

தேசிய கல்விக் கொள்கையை குறுக்கு வழியில் தமிழ்நாட்டில் நுழைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த தெளிவான விளக்கத்தை காண்போம்..

Etv Bharat
Etv Bharat

பிரின்ஸ் கஜேந்திரபாபு

கரூர்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் பயிலரங்கு கரூர் உழவர் சந்தை அருகே உள்ள நாரதகான சபை மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் எம்.கே. முருகன் தலைமையில் நடைபெற்றது.

பயிலரங்கில் முதல் நாள் அமர்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தமிழில் ''முற்போக்கு தடயங்கள்'' என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மதிய அமர்வில் ''கல்விக் கொள்கை எதிர்நோக்கும் சவால்கள்'' என்ற தலைப்பில், பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்குப் பிரின்ஸ் கஜேந்திரபாபு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் தொடக்கத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்துவதற்கும் கட்டணமில்லா கல்வியை எல்லோருக்கும் அரசு வழங்க முன் வர வேண்டும் என வலியுறுத்தும் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் நான் கரூரில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது அரசுப் பள்ளிகளை பலகீனப்படுத்தக்கூடிய ஒன்றாகும். தேசிய கல்விக் கொள்கை வரைவில் அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற இரண்டு பிரிவுகளைப் பற்றி தான், விவரிக்கிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி என்ற ஒன்றைப் பற்றி அதில் பேசப்படவில்லை. ஆகவே, அரசு உதவி பெறும் பள்ளிகளை முற்றிலுமாக அழித்து விடுவது, அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக பலகீனப்படுத்துவது, இத்தகைய சூழ்நிலையில் மொத்த கல்வியையும் தனியார் வசம் ஒப்படைப்பது ஆகியவைதான் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கமாக உள்ளது.

ஏற்கனவே உள்ள கல்விக் கொள்கையில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதன் மூலம் கல்லூரிக்குச் செல்வதற்கு நுழைவுவாயிலாகப் பள்ளிகள் உள்ளன. ஆனால், இந்த கட்டமைப்பை சிதைத்து விட்டு தேசிய கல்விக்கொள்கை மூலம் 5+3+4 என்ற முறையில் ஊக்கப்படுத்துவதால் ஐந்து வயதுக்கு முன்னரே வணிக ரீதியாக இயங்கக்கூடிய விளையாட்டுப் பள்ளிகளை ஊக்கப்படுத்தக் கூடியதாக உள்ளது.

முறையில்லாத கல்வியை அமல்படுத்துவதற்காக யுஜிசி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள The National Credit Framework என்ற ஆவணத்தையும் , தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு என்.சி.எப் (National Curriculum Frame work) என்ற ஆவணத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில், பள்ளிகளில் துவங்கி கல்லூரி வரை, வீட்டிலிருந்து கற்றுக்கொண்ட செயல்முறைகள் மற்றும் மரபு வழியாக கற்றுக்கொண்ட அறிவு என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக பள்ளிக்குச்சென்று பாடம் கற்கும் முறையை அகற்றி, கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக் கல்வியை சிதைத்து, ஆசிரியர் என்ற பணியிடமே ஒன்று தேவை இருக்காது என்ற புது சிக்கல்களை உருவாக்கியுள்ளது. மொத்த கல்வியையும் எண்ணறிவு, எழுத்தறிவு என சுருக்கும் நிலைக்குச் செல்ல உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது.

ஒருபுறம் ஒன்றிய அரசு, நடைமுறைப்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் தமிழக அரசு, மறுபுறம் ''நான் முதல்வன் திட்டம்'', ''எண்ணும் எழுத்தும் திட்டம்'', ''இல்லம் தேடி கல்வி'' என தனது கட்சி தொண்டர்களை வைத்து, பள்ளிப் பாடங்களை நடத்தி முடிக்கலாம் என நினைக்கிறது. தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020 வரைவு அறிக்கை சென்றடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் பாதகமாக இருக்கும் விதிகளை அமல்படுத்தக்கூடாது என்பதே தமிழக ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது'' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ''இன்றைய பத்திரிகை செய்தியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம், பள்ளிகளில் குழந்தைகளுடைய உரிமை மீறப்படுகிறதா என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில கல்வித்துறைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அகாடமிக் அத்தாரிட்டி ( Academic Authority) வழங்கியுள்ள பாடத்திட்டங்களை தவிர, மாநில அரசு(State), வாரிய (Board) பாடத்திட்டங்களை பள்ளியில் அமல்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தில், மாநிலம் மற்றும் வாரியம் என குறிப்பிடுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநில கல்வி வாரியத்திற்கு பாடத்திட்டங்களை வகுக்கும் உரிமை இல்லை என கடிதத்தில் கூறப்பட்டிருப்பதை எப்படி கல்வியாளர்கள் புரிந்து கொள்வது. இந்த கடிதம் தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிய அரசு, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சில அமைப்புகள் மூலம் பல்வேறு விதிமுறைகளை மாநில அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறையில் தலையீடு செய்வதற்கு, இது போன்ற அமைப்புகளுக்கு உரிமையே கிடையாது. அதன் எல்லையை மீறி மாநில கல்வித் துறைக்கு வழிகாட்டுதல் வழங்கும் அளவிற்கு ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் மாநில அரசின் கல்வி உரிமையை மீறும் வகையில் வழிமுறைகளை புகுத்தி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை மாநிலத்தில் புகுத்துவதற்கு பல்வேறு தந்திரங்களில் ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. இதனை தமிழக அரசு விழிப்போடு இருந்து தடுக்க வேண்டும். கல்வி அறிவு என்ற ஒன்று இல்லாமல் போகும் சூழல் உருவாக உள்ளது. கையொப்பமிட எழுத்தறிவு தெரிந்தால் போதும், நேரத்தைக் கணக்கிடுவதற்கு எண்ணறிவு இருந்தால் போதும் என அடுத்த 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தேசிய கல்விக் கொள்கை 2020-னை அமல்படுத்த ஒன்றிய அரசு நயவஞ்சமாக முயற்சித்து வருகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் தேசியக் கொள்கை நுழைவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இது தவிர கல்வியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் புதிய கல்வித் திட்டங்களை தமிழ்நாடு கல்வியல் பல்கலைக்கழக பாடத்திட்டங்களுடன் புகுத்தும் நடைமுறை என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே, உள்ள கல்வியியல் பாடத்திட்டங்கள் அடிப்படை அறிவை ஆழமாக பெறக்கூடிய பாடத்திட்டங்களாக உள்ளன.

ஆனால், ஆசிரியர் படிப்பு படிக்கும் பட்டதாரிகளை ஒரு வேலைக்கு தயார் செய்யும் யுத்தியை கையாள முயற்சிக்கும் சிக்கல்கள் தற்பொழுது நுழைக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் கல்வித் தகுதித் தேர்வு அவசியமற்ற ஒன்று.

தகுதிபெற்ற ஒருவருக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு தேவையா என்பதே கல்வியாளர்களின் கேள்வி. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளில் ஆசிரியர்களின் திறனை அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதா என்பதே நம் முன் இருக்கும் முதல் கேள்வி.

கல்வி கற்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு உள்ளது என்பதை எப்படி ஆசிரியர்கள் கண்டறிவார்கள் அல்லது கற்றல் குறைபாடைக் களைவதற்கு பாகுபாடு இன்றி எந்த யுத்தியை ஆசிரியர்கள் கையாளுவார்கள் எனக் கேட்பது, ஆசிரியர் பணிவோடு சம்பந்தப்பட்ட கேள்வி. ஆனால், பாடப்புத்தகத்தில் படித்த அறிவு எந்த அளவுக்கு நினைவு சக்தியை ஒரு ஆசிரியர் வைத்துள்ளார் என்பதை அறியும் வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுகிறது.

இவை அனைத்தும் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் உள்ளது. நினைவாற்றலுக்கு அப்பால் ஆசிரியர்களின் திறமையை சோதிக்கும் தேர்வாக இல்லை. ஆசிரியராகப் பணியாற்றப்போகும் ஒருவருக்கு ஆர்வம், திறன், செயல்பாடு, வகுப்பறையில் ஆசிரியரின் செயல்பாடு ஆகியவற்றை சோதிக்கும் தேர்வாக இல்லை. எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஒரு நியாயமற்ற அணுகுமுறையாகும். தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது அவசியமற்றது'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேசிய திருநர் தினம்: 1 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்.. காவலராக போராடி வரும் தஞ்சை யாழினி!

ABOUT THE AUTHOR

...view details