தமிழ்நாடு

tamil nadu

சாதிய வன்கொடுமையை கண்டித்த ஆட்சியர்.. போர்க்கொடி தூக்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 10:03 PM IST

சாதிய வன்கொடுமையை எதிர்த்த கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாதிய வன்கொடுமையை கண்டித்த ஆட்சியர்
சாதிய வன்கொடுமையை கண்டித்த ஆட்சியர்

கரூர்: அரவக்குறிச்சி அருகே தெத்துப்பட்டி ஊராட்சியில் காலை உணவு திட்டத்தில், பட்டியலின பெண் ஒருவர் உணவு சமைத்து வருகிறார். இதனால், அப்பள்ளியில் பயிலும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 15 பள்ளி மாணவர்கள் காலை உணவை புறக்கணித்து வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் செப்.5ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களின் பெற்றோர், தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி மோகன்குமார் ஆகியோரை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “சாதிய பாகுபாடை பள்ளி வளாகத்திற்குள் புகுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், ஊராட்சி மன்ற தலைவரும் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த மாணவர்களின் பெற்றோரும், ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது என மாவட்ட ஆட்சியரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காவல் துறையை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஊராட்சி மன்ற கூட்டம்

இந்நிலையில் இன்று (செப்.6) அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வேலஞ்செட்டியூர் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது, தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை எச்சரிக்கை செய்த, கரூர் மாவட்ட ஆட்சியரை வன்மையாக கண்டிக்கும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பில் உள்ள 16 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சி மன்ற தலைவர்களும் நேரடியாக எதிர்ப்பை பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சாதி தான் இருக்கு.. பேருந்து இல்லை.. நாங்குநேரி மக்களின் 15 ஆண்டு தீராத்துயர்..!

ABOUT THE AUTHOR

...view details