தமிழ்நாடு

tamil nadu

24 மணிநேரமும் மது விற்பனை; அரசு பேருந்து முழுவதும் விளம்பரம் - திமுக அரசை விமர்சித்த மாஜி அமைச்சர்!

By

Published : Jul 31, 2023, 7:58 AM IST

Updated : Jul 31, 2023, 8:10 AM IST

திராவிட மாடல் ஆட்சியில், மருத்துவமனை சேவை போல தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ex Minister Vijayabaskar
மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு

கரூர்:அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி கரூரில் அந்த மாநாடு தொடர்பான ஸ்டிக்கரை சுமார் 100 ஆட்டோக்களில் ஒட்டும் பணியினை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மதுரை மாநாடு குறித்து எழுதும் சுவர் விளம்பரங்களை தடுப்பதற்கு கரூர் எஸ்பி கூறியதாக கூறி தடுத்து வருகின்றனர். எந்த ஒரு மாவட்டங்களிலும் இதுபோன்று சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கு தடை இல்லை. ஆனால் கரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சுவர் விளம்பரம் எழுதக்கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

கரூரில் திமுகவினர் மேற்கொண்டு வரும் சுவர் விளம்பரங்கள் குறித்து கேட்டால், அது குறித்து அவர்கள் எதுவும் செய்ய முடியாது எனக் கூறுகின்றனர். கரூர் மாவட்டத்தில் திமுகவினர் அதிமுகவை சுவர் விளம்பரம் எழுத விடாமல், போலீஸ் துணையுடன் விளம்பரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது. ஆனால் கரூர் மாவட்டம் மட்டும் திமுகவின் தனித்தீவு போல உள்ளது.

அதிமுகவின் சுவர் விளம்பரங்களை தடுப்பதினால் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டத்தை தடுக்க முடியாது. மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள். அந்த விளம்பரத்திற்கு நடுவே ஒரு சின்ன இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் என வெளியில் தெரிகிறது. போக்குவரத்து கழகத்தில் வரைமுறைகளை மீறி விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இதுபோன்று பேருந்து முழுவதும் விளம்பரம் செய்வதால் அதனை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்த்து விபத்துக்களை தான் ஏற்படுத்தும். காசு கொடுத்தால் எங்கு வேண்டும் என்றாலும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்கள். பீர் கம்பெனி விளம்பர டி சர்ட் போட்டு கிரிக்கெட் பார்க்க வரும் அமைச்சர் உதயநிதி, அரசுப் பேருந்தில் பீர் விளம்பரம் போடாமல் இருப்பார்களா, சொல்ல போனால் அந்த நிறுவனமே அவர்களுடையது தான் என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், போக்குவரத்துக் கழகத்தில் கூட அவர்கள் பணம் செலுத்தி விளம்பரம் செய்வார்கள். தமிழ்நாட்டின் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் ஈரோடு சேர்ந்த முத்துசாமி, வேலைக்கு செல்லும் குடிமகன்கள் காலை 7 மணிக்கு மது கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக கூறுகிறார். கரோனா ஊரடங்கு முடிந்து முந்தைய அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்த போது கருப்பு சட்டை அணிந்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

ஆனால் இப்பொழுது தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தான் 24 மணி நேரமும் சேவை என்று விளம்பரம் இருக்கும், அதுபோல தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் அவல நிலை விடிய அரசு மக்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதான். வாழ்க திராவிட மாடல் ஆட்சி" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை" - சரத்குமார் திட்டவட்டம்!

Last Updated : Jul 31, 2023, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details