தமிழ்நாடு

tamil nadu

கரூரில் 2-வது நாளாக சோதனை: செந்தில் பாலாஜியின் சகோதரரை நெருங்கும் அமலாக்கத்துறை!

By

Published : Aug 4, 2023, 3:18 PM IST

கரூரில் அமலாக்கத்துறை சோதனை மூன்று இடங்களில் நிறைவு பெற்ற நிலையில், மேலும் இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூரில் அமலாக்கத்துறையினர் சோதனை
enforcement raid karur

கரூரில் இரண்டாவது நாளாக சோதனை

கரூர்: கரூரில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகிறது. கரூரில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

இவற்றில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் சண்முகத்தின் அம்பாள் நகர் குடியிருப்பில் உள்ள அரசி அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் அவரது கரூர் செங்குந்தர் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஆகிய இரண்டு இடங்களில் நேற்று இரவு (ஆகஸ்ட் 03) சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடித்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் உரிமையாளர் பிரகாஷ் என்பவரது நிறுவனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீடு என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையைத் தொடர்ந்தனர். இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 04) காலை 8.15 மணி அளவில் தனலட்சுமி மார்பிள்ஸ் கடையில் மட்டும் சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் காரில் கிளம்பிச் சென்றனர்.

தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் பிரகாஷ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் மட்டும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர, கரூர் நகரப் பகுதியில் உள்ள அண்ணாநகர் லக்கி டையிங் உரிமையாளர் வீட்டில் சோதனையை இன்று (ஆகஸ்ட் 04) காலை 11 மணியளவில் புதிதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

முன்னதாக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார். அவரது மனைவி நிர்மலா பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக கட்டி வரும் வீட்டில், விலை உயர்ந்த கிரானைட் மார்பில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மே 28ஆம் தேதி சோதனை நடத்தியபோது முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய ஆவணங்களின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி வரும் பிரமாண்ட வீட்டிற்கு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் கோவையைச் சேர்ந்த அருண் அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனம் மற்றும் கோவையில் அருண் சிவராம் நகரில் உள்ள அவரது வீட்டிலும் நேற்று (ஆக்.3) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த டைல்ஸ் கிரானைட் பொருட்கள் வாங்கியது குறித்தான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை நெருங்கும் அமலாக்கத்துறை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைதில் புழல் சிறையில் உள்ள நிலையில், அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நகர்வாக உள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்குத் தொடர்பான விசாரணை நிறைவு பெற்று, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கரூரில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால், செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட வீடு தொடர்பான நிலம் வாங்கியதில் முறைகேடு, வீடு கட்டுவதற்கு விலை உயர்ந்த கட்டுமானப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை ஆகியவற்றைக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக் (சிக்கல் ) அமலாக்கத்துறை மூலம் தயாராக உள்ளது.

இதையும் படிங்க:76வது சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை - சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details