தமிழ்நாடு

tamil nadu

விஜயதசமி விழாவை முன்னிட்டு பச்சரிசியில் 'அ' எழுதி கல்வி தொடங்கிய குழந்தைகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 5:44 PM IST

Vijayadashami festival: விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது

நாகர்கோவில் ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோயிலில் பச்சரிசியில் அ எழுதி கல்வி தொடங்கிய குழந்தைகள்
நாகர்கோவில் ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோயிலில் பச்சரிசியில் அ எழுதி கல்வி தொடங்கிய குழந்தைகள்

நாகர்கோவில் ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோயிலில் பச்சரிசியில் அ எழுதி கல்வி தொடங்கிய குழந்தைகள்

கன்னியாகுமரி: நவராத்திரி விழாவின் கடைசி மற்றும் பத்தாம் நாள் விழாவான இன்று (அக்.24) விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி குழந்தைகளுக்கு முதல் முதலாகக் கல்வி தொடங்கும் நாளாகக் கருதப்படுகிறது. இதனை ஏடு தொடங்கும் வித்யாரம்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

விஜயதசமி தினத்தன்று சரஸ்வதி கோவில் உள்ளிட்ட தேவி கோயில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மங்களகரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.24) விஜயதசமி விழா கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சரஸ்வதி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் கொண்டாடப்பட்டு
வருகிறது.

கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வன மாளீஸ்வரா கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் கோவில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு பச்சரிசியில் அகர முதல எழுத்துகளை எழுதச் செய்து, குழந்தைகளின் கல்வியைத் தொடங்கி வைத்தனர்.

விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் அவர்களின் வாழ்வில் கல்வி செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து வித்யாரம்பம் செய்து சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

மேலும், இது குறித்துப் பெற்றோர்கள் கூறும் போது, "குழந்தைகளின் கல்விக்காகப் பள்ளியில் சேர்க்கும் முன்பாக வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இந்த விஜயதசமி நாளில் கல்வி தொடங்கும் போது எதிர்காலத்தில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் வருகை தந்து வித்யாரம்பம் செய்து செல்கின்றனர். இதனால், ஸ்ரீ வன மாளீஸ்வரா கோயிலில் காலையிலிருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.

இதையும் படிங்க:ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details