தமிழ்நாடு

tamil nadu

கடலில் மூழ்கியவரை அடையாளம் காண்பதில் சிக்கல்: மரபணு சோதனை நடத்த ஆட்சியரிடம் மனு!

By

Published : Jul 30, 2020, 5:45 PM IST

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மரபணு சோதனை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

மரபணு சோதனை நடத்த ஆட்சியரிடம் மனு
மரபணு சோதனை நடத்த ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அடுத்த முள்ளூர்துறை பகுதியைச் சேர்ந்த சீலன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தார்.

அதில், “நானும் எனது தந்தை ஆண்டனியும் கடந்த 23ஆம் தேதி தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் உள்ள வள்ளத்தில் மீன்பிடிக்க காலையில் சென்றோம். அப்போது கடல் அலை சீற்றத்தின் காரணமாக புறப்பட்ட இடத்திலேயே வள்ளம் (மீன்பிடி படகு) கவிழ்ந்து எனது தந்தை கடலில் மாயமானார். பின்னர் கடலோர காவல் படை உதவியுடன் உடலை தேடியபோது, கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து கடந்த 27ஆம் தேதி உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் அதிகாரிகள் உதவியுடன் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

இந்நிலையில் மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க சிபு கடல் சீற்றம் காரணமாக காணாமல் போய்விட்டார். இந்த சிபுவின் குடும்பத்தார் எனது தந்தையின் உடலைப் பார்த்து இது எங்கள் மகனுடைய உடல் இல்லை என்று முதலில் உறுதி செய்தனர்.

கடலில் மூழ்கியவரை அடையாளம் காண்பதில் சிக்கல்: மரபணு சோதனை நடத்த ஆட்சியரிடம் மனு!

ஆனால், நான் எனது தந்தையை அடையாளம் காட்டி எனது தந்தை என உறுதி செய்து பிரேத பரிசோதனை நடந்த பிறகு சில நபர்களின் தூண்டுதலின் பேரில் இறந்த சிபுவின் உறவினர்கள் எங்களது மகனுடைய உடல் என்று உரிமை கோருகிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே அந்த உடல் என்னுடைய தந்தையின் உடலாகும். எனவே மாவட்ட ஆட்சியர் உடலை மரபணு சோதனைக்கு அனுப்பி அதில் முடிவு வந்த பிறகு உடலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதுவரை எனது தந்தையின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பாதுகாப்பில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!

ABOUT THE AUTHOR

...view details