தமிழ்நாடு

tamil nadu

10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் முதலிடத்திற்கு முன்னேறிய குமரி மாவட்டம்!

By

Published : Jun 20, 2022, 3:09 PM IST

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, +2 பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9ஆவது இடத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தற்போது 13ஆவது இடத்திற்கு சென்றதோடு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 97.22% தேர்ச்சி பெற்று முதலிடமும் பெற்றுள்ளன.

குமரி முதல் இடம்
குமரி முதல் இடம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 10,959 பேரும் மாணவிகள் 11,916 பேரும் என மாணவ-மாணவிகள் மொத்தம் 22,875 பேர் +2 தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று (ஜூன்20) வெளியானது.

இதில் 10,148 மாணவர்களும் 11,731 மாணவிகளும் என மொத்தம் 21,879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.60% பேரும் மாணவிகள் 98.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 95.65% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த +2 பொதுத் தேர்வின்போது, குமரி மாவட்டம் 95.06% எடுத்து 9ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில், தற்போது 13ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்த நிலையிலும் மாவட்ட அளவில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநிலத்தில் 97.22% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி, +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. குமரி மாவட்டத்திலும் எஸ்எஸ்எல்சி, +2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் குவிந்தனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வை பொறுத்தமட்டில் குமரி மாவட்டத்தில் 11,405 மாணவர்களும் 11,580 மாணவிகளும் என மொத்தம் 22,985 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,893 மாணவர்களும் 11,452 மாணவிகள் என மொத்தம் 22,345 பேர் என்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.51% பேரும் மாணவிகள் 98.89% பெரும் வெற்றி பெற்றுள்ளனர். சராசரியாக 97.21% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமானோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குமரி மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டை பொறுத்தமட்டில், எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் மாநில அளவில் எஸ்எஸ்எல்சி தேர்வில் குமரி மாவட்டம் 98.08% பெற்று 2ஆவது இடம் பிடித்து இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்து சாதனைப் படைத்து உள்ளது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெறவில்லை.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் முதலிடத்திற்கு முன்னேறிய குமரி மாவட்டம்!

குமரி மாவட்டம், ஏற்கெனவே மாநில அளவில் கல்வி அறிவு நிறைந்த மாவட்டம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மாநில அளவில் சாதனைப் படைத்துள்ளது. சாதனைப் படைத்த பள்ளி ஆசிரியர்களை கல்வி அலுவலர்கள் பாராட்டியுள்ளனர். கடந்த 2019ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கிடைக்கப்பெற்ற தேர்ச்சி விழுக்காட்டை விட இந்த கல்வியாணடில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து இருந்தாலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ்நாடு அளவில் கன்னியாகுமரி முதல் இடம் கிடைக்க பெற்ற நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குறைந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. அதிகரித்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்...

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details