தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரியில் கடந்த 25 மணி நேரமாக விடாது பெய்யும் கனமழை… முக்கிய அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 12:51 PM IST

Updated : Dec 18, 2023, 1:37 PM IST

Kanniyakumari Rain Update: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 மணி நேரத்துக்கு மேலாகப் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் கடந்த 25 மணி நேரமாக விடாது பெய்யும் கனமழை
கன்னியாகுமரியில் கடந்த 25 மணி நேரமாக விடாது பெய்யும் கனமழை

கன்னியாகுமரியில் கடந்த 25 மணி நேரமாக விடாது பெய்துவரும் கனமழை

கன்னியாகுமரி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 25 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நாகர்கோவில் மீனாட்சி கார்டனில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் இரண்டு நாட்களாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 303 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதே போல் நாகர்கோவிலில் 181 மில்லி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 180 மீட்டர் மழையும், கன்னியாகுமரியில் 158 மில்லிமீட்டர், பூதப்பாண்டி 140 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேசிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.57 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5 ஆயிரத்து 32 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.32 அடியாக உயர்ந்துள்ளது.

பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து 587 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டால், கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கன்னியாகுமரி மற்றும் சின்னமூட்டம் பகுதிகளிலிருந்து நாட்டுப் படகுகள் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதி கனமழை எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து!

Last Updated : Dec 18, 2023, 1:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details