தமிழ்நாடு

tamil nadu

நெருங்கிய கிறிஸ்துமஸ்.. குமரியில் பன்மடங்கு உயர்ந்த பூக்கள் விலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 12:43 PM IST

Thovalai flower market: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புகழ் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பன்மடங்கு உயர்வு
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பன்மடங்கு உயர்வு

கன்னியாகுமரி:கறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை பூ சந்தையில் விதவிதமான பூக்கள் வந்து குவிந்துள்ளன. பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், தற்போது பூக்களின் தேவை அதிகரித்திருப்பதால் விற்பனை களைகட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலர் சந்தைகளில் மிகவும் முக்கியமானது, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை. இந்த தோவாளை பூ சந்தை உலக வர்த்தக மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் பூக்கள் கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தோவாளை பூ சந்தைக்கு பெங்களூரு, ஓசூர், சேலம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை, செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி குமாரபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேந்தி பூ, செவ்வந்தி, பிச்சி, மல்லிகை, தாமரை போன்ற பூக்கள் டன் கணக்கில் கொண்டு வரப்படுகிறது. அவை இங்கிருந்து உள்ளூர் விற்பனைக்காகவும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஒரு விற்பனை மையமாகவும் இந்த சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பூக்களின் விலை இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு என உயரும். அந்த வகையில், இன்று நள்ளிரவு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தேவாலயங்களில் மின் விளக்குகளுக்கு இணையாக பூக்களின் அலங்காரங்களும் இடம்பெறும் என்பதால், பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட முட்டை விலை.. 50 ஆண்டுகால வரலாறு காணாத உயர்வுக்கு காரணம் என்ன?

தற்போது பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூக்களின் தேவை அதிகரிப்பால் விற்பனை களைகட்டி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று தோவாளை மலர் சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ, 3,500 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

இதே போன்று 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ 2,500 ரூபாயாகவும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் 2,000 ரூபாயாகவும் விலை உயர்ந்து உள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கிரேந்தி 110 ரூபாயாகவும், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஸ் 170 ரூபாயாகவும், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வந்தி 200 ரூபாயாகவும், 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தாமரை பூ 20 ரூபாயாகவும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி 250 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.

இதையும் படிங்க: புதுமைப்பெண் திட்டத்தில் பாரதியாக வாழும் முதல்வர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details