தமிழ்நாடு

tamil nadu

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் ஜெயந்தி விழா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 2:10 PM IST

Anjaneyar Jayanthi festival: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, இன்று 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ள நிலையில், அதனைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் ஜெயந்தி விழா கோலாகலம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் ஜெயந்தி விழா கோலாகலம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் ஜெயந்தி விழா கோலாகலம்

கன்னியாகுமரி:குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில், அதனைக் காண மக்கள் குவிந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்வது, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில். இந்த கோயிலில் உள்ள 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர், பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆஞ்சநேயருக்கு, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று (ஜன.10) கொண்டாடப்பட்டு வருகிறது. ஜன.9ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தொடர்ந்து நீலகண்ட விநாயகா் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், உச்சிக்கால தீபாராதனை, மாலை கால பைரவருக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதையும் படிங்க: சிக்ஸு சிக்ஸு.. கிரிக்கெட் களத்தில் அலப்பறை செய்யும் விஜய்.. வைரலாகும் வீடியோ!

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை ராமபிரானுக்கு அபிஷேகம், அதன் பின்னர் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மஞ்சள், இளநீர், நல்லெண்ணெய், களபம், பன்னீர், தேன், பால், அரிசி, தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நண்பகல் அன்னதானமும், அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பும், பின்னர் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு கழுத்து நிறையும் வகையில் பல்வேறு வகையான பூக்கள் கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஆலங்கார தீபாராதனையுடன் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நிறைவு பெறும். இந்த அபிஷேகங்களை காண்பதற்காகவும், தரிசனம் செய்வதற்காகவும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சிறப்பு பூஜைக்கு வெற்றிலை, பல வகையான பூக்கள், வடை மாலைகளுடன் பக்தர்கள் வந்து, அஞ்சநேயருக்கு படைத்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு பிரசாதத்துடன் லட்டும், பஞ்சாமிர்தமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொன்றுதொட்டு அகப்பையை இலவசமாக வழங்கும் வேங்கராயன் குடிக்காடு குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details