தமிழ்நாடு

tamil nadu

ஏழ்மையில் நேர்மை: காவல் துணை ஆய்வாளர் வியாபாரிக்கு பரிசு

By

Published : Jun 18, 2021, 6:05 PM IST

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் பகுதியில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்த பெண் தன்னிடம்வந்த வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க கொலுசை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு காவல் நிலைய காவல் துணை ஆய்வாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட வியாபாரிக்கு காவல் துணை ஆய்வாளர் பரிசு அளித்துள்ளார்
ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட வியாபாரிக்கு காவல் துணை ஆய்வாளர் பரிசு அளித்துள்ளார்

அஞ்சுகிராமம் அருகே கருங்குளத்தை சேர்ந்தவர் சுதா (40). இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று வருடங்களாகஅஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகே கொய்யாப்பழம் வியாபாரம் செய்துவருகிறார்.

கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் வாடிவந்தார். இவர் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்துவருகிறார்.

நேர்மை செயலால் பாராட்டு

இவரிடம் பழம் வாங்கவந்த யாரோ ஒரு நபர் பழம் வாங்கிச் செல்லும்போது தங்க கொலுசை தவறவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து இவர் கீழே பார்க்கும்போது தங்க கொலுசு இருப்பதைக் கண்டுள்ளார். உடனே அதை எடுத்துக்கொண்டு நேராக அஞ்சுகிராமம் காவல் நிலையம் சென்றார்.

அங்கு காவல் துணை ஆய்வாளர் ஜெஸ்ஸி மேனகாவிடம் நகையை கொடுத்து நடந்த விவரங்களை கூறினார். அப்போது ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட இந்தப் பெண்ணின் சிறந்த குணத்தைப் பாராட்டி காவல் துணை ஆய்வாளர் அப்பெண்ணிற்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.

அதனைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து நகையை தவறவிட்ட பெண் சுதாவிடம் வந்து அப்பெண் விசாரித்திருக்கிறார். அப்போது சுதா நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அந்தப்பெண் காவல் நிலையம் வந்து விவரங்களை கூறி நகையை பெற்றுக்கொண்டார். ஏழ்மையிலும் நேர்மையை கடைபிடித்த அப்பெண்ணை காவலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details