தமிழ்நாடு

tamil nadu

யார் பெரிய ரவுடி... பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய இரட்டைக்கொலையால் பொதுமக்கள் அச்சம்

By

Published : Aug 25, 2022, 8:09 PM IST

காஞ்சிபுரம் அருகே பழிக்கு பழி கொலை செய்து வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் ரவுடிகளை கண்டுகொள்ளாத காவல்துறையினரால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

யார் பெரிய ரவுடி பழிக்கு பழி... அரங்கேறிய இரட்டை கொலையால் பொதுமக்கள் அச்சம்
யார் பெரிய ரவுடி பழிக்கு பழி... அரங்கேறிய இரட்டை கொலையால் பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: படப்பை அடுத்த மணிமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வைத்து சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளான விக்னேஷ்(23), மற்றும் சுரேந்தர்(20), ஆகிய இருவரையும் காவல் நிலையம் அருகிலேயே வைத்து மிக கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துவிட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்தில் வந்து நான்கு பேர் சரணடைந்தனர்.

தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்தது மணிமங்கலம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ்வரன்(22),புஷ்பராஜ்(19), லோகேஸ்வரன்(19), டில்லிபாபு(21) என்பதும், இவர்களது நண்பரான தேவேந்திரன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட இருவரும் முக்கியக் குற்றவாளிகள் என்றும்; இவர்கள் கடந்த மாதம் தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளனர் என்றும் தகவல் தெரியவந்துள்ளது.

தேவேந்திரனின் நண்பர்கள் நேற்றைய முன் தினம் இரவு லோகேஸ்வரனின் தம்பியை அவரது வீட்டினருகே சென்று மிரட்டிவிட்டு, ’உங்க அண்ணன் எங்கடா, அவனை பார்த்து இருந்துக்க சொல்லு’ என மிரட்டி விட்டு வந்துள்ளனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட லோகேஸ்வரன், ’இனி இந்த நபர்களை விட்டால் சரிவராது’ எனக் கூறி தனது நண்பர்களோடு சேர்ந்து இருவரையும் கொலை செய்துவிட்டு, இருவரின் கதையையும் முடித்துவிட்டதாக வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார். இதனால் மணிமங்கலம் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கொலையான நபர்கள் கூட கையில் கத்தியுடன்தான் சுற்றி திரிந்துள்ளனர். உளவுத்துறை போலீசார் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்காமல் விட்டதே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. காவல் துறையினர் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தாமல்விட்டால் இன்னும் பல கொலைகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் சரணடைந்த நான்கு பேரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு, கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கஞ்சா புகைத்த காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details