தமிழ்நாடு

tamil nadu

காஞ்சியில் தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்

By

Published : May 7, 2023, 6:47 PM IST

காஞ்சிபுரத்தில் தேர்வு மையத்தை பூட்டியதால் கொதிப்படைந்த தேர்வர்கள் மையத்தின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தேர்வு மையத்தின் கதவை உடைத்த தேர்வர்கள்

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில், தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இன்று (மே 07) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுத விண்ணப்பித்த தேர்வர்களுக்கு அதற்குண்டான நுழைவுச்சீட்டும் அனுப்பப்பட்டது.

காலையில் தேர்வு முடிந்து, அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு அடுத்த தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. தேர்வர்கள் 30 நிமிடங்கள் முன்னதாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மையக் கதவுகள் மூடப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், 1:30 மணிக்கு மேல் வந்த 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்களை உள்ளே விடக்கோரி காவல் துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென நுழைவுவாயில் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்து தேர்வெழுதத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறைந்த அளவிலான காவல் துறையினரே பாதுகாப்புப் பணியில் இருந்ததால் தேர்வர்களைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

உடனடியாக தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையக் கண்காணிப்பு அலுவலர் வந்து நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், டிஎஸ்பி தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளே சென்ற மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தருமபுரியில் நீட் தேர்வு எழுத டவுசருடன் வந்த மாணவர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details