தமிழ்நாடு

tamil nadu

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கிட ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்த திட்டம்

By

Published : Jul 15, 2022, 6:42 PM IST

காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கிட ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க ரோபோடிக் இயந்திரம் - காஞ்சி மாநகராட்சி ஆய்வு!
பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க ரோபோடிக் இயந்திரம் - காஞ்சி மாநகராட்சி ஆய்வு!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51ஆவது வார்டு பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாடு காரணமாக பாதாள சாக்கடையில், அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் சாலைகளில் வெளியேறியும், இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது நீக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்த திட்டம்

அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய வாகன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகன இயந்திரங்களுக்கு மாற்றாக, தற்காலத்திற்கு ஏற்ப அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதனை செயல்படுத்தவுள்ளது.

இதன் அடிப்படையில், ஜெம்ரோபோடிக்ஸ் என்ற தனியார் ரோபோடிக் நிறுவனம் தயாரித்துள்ள அதி நவீன கேமராவுடன் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தின் செயல்பாடுகளை, நேரடி செயல்முறை மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் அறிந்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே, இன்று (ஜூலை 15) காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 1 ஆவது வார்டு ஒலி முகமதுபேட்டை பகுதியில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை நீக்கி இந்த ரோபோடிக் இயந்திரத்தின் செயல்பாடுகளையும், செயல்முறைகளையும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி பணியாளர்களுக்கும் தனியார் ரோபோடிக் நிறுவனம் செய்து காண்பித்தது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில், “காஞ்சிபுரம் மாநகர பகுதியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க தற்காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று அதன் செயல்பாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கினார்கள்.

இவை முக்கிய சாலைகளில் நேரடியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோடிக் இயந்திரம் மூலம் 125 கிலோ எடை வரை அடைப்புகளை வெளியே எடுக்க முடியும். இதன் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இதனை வாங்கி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் பணியில் மனிதர்கள் பயன்படுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்படும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விழுப்புரம் அருகே ஏரியில் கலக்கும் மாசு நீரால் சுகாதார சீர்கேடு; தொற்று நோய்கள் தாக்கும் அபாயம்

ABOUT THE AUTHOR

...view details