தமிழ்நாடு

tamil nadu

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கியது எப்படி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:08 PM IST

காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

kanchipuram-corporation-bill-collector-arrested-for-bribe
காஞ்சிபுரம் பில் கலெக்டர் ரேணுகா தேவி

காஞ்சிபுரம் பில் கலெக்டர் ரேணுகா தேவி

காஞ்சிபுரம்:மதுராந்தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் அதே பகுதியில் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது இரண்டு மகன்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி, ஆகியவற்றை மகன்கள் பெயரில் மாற்றம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

நீண்ட நாள்களாக பெயர் மாற்றம் செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் சுந்தரை அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர். இதனால் அந்த அலுவலகத்தில் உள்ள பில் கலெக்டர் (வரி வசூலிப்பு அலுவலர்) ரேணுகாதேவியிடம் இது குறித்து சுந்தர் கேட்டுள்ளார். அதற்கு ரேணுகாதேவி, 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர், இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி 5 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் ரேணுகாதேவியிடம் கூறுமாறு சுந்திரிடம் தெரிவித்து அனுப்பியுள்ளனர்.

அதன்படி சுந்தர், இன்று (ஆக.30) காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை சுந்தரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட ரேணுகாதேவியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற சுந்தர், பில் கலெக்டர் ரேணுகாதேவிக்கு போன் செய்துள்ளார். அதற்கு அவர், தான் ஆலடித்தோப்பு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் அங்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

இதனை அப்படியே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்த சுந்தர், குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று ரேணுகாதேவியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர்கள் அண்ணாதுரை, கீதா தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரேணுகாதேவியை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரை மாநகராட்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, சொத்துவரி, பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :திருவள்ளூர் மாணவர் விடுதியில் முறைகேடு? விடுதிக்கு வராத மாணவர்களுக்கு கணக்கு காட்டியது அம்பலம்.. அமைச்சர் கயல்விழி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details