தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் விடுமுறைக்குப் பிறகு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உற்பத்தித் தொடங்க வாய்ப்பு

By

Published : Jan 12, 2022, 8:49 PM IST

கடந்த 25 நாள்களுக்குப் பிறகு இன்று ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை திறக்கப்பட்டும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தித் தொடங்கவில்லை. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தொடர்ச்சியாக உற்பத்தித் தொடங்க வாய்ப்புள்ளது என அதன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உற்பத்தி தொடங்க வாய்ப்பு
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உற்பத்தி தொடங்க வாய்ப்பு

இந்தியாவில் பிரபல ஆப்பிள் ஐஃபோன் செல்போனின் உதிரிபாகங்களைத் தயாரித்துவரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலையில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் தங்கி வருகின்ற நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவு காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உற்பத்தித் தொடங்க வாய்ப்பு

தொழிலாளர்கள் போராட்டம்

இதில் எட்டு பேர் இறந்துவிட்டதாகப் பரவிய தவறான வதந்தியால் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 18 மணி நேரமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடத்திய பேச்சுவார்த்தையால் பெண் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் முறையான ஊதியம் வழங்கப்படவில்லை, உணவு சரியில்லை என அமைச்சர்களிடம் பெண்கள் குற்றஞ்சாட்டினர்.

ஊதியத்துடன் விடுப்பு

பின்னர் தொழிற்சாலைக்கு 10 நாள்கள் விடுமுறை அளிப்பதாகவும், தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன்கூடிய விடுப்பு அளிப்பதாகவும் தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்தது.

இதற்கிடையில் ஒரகடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்தனர். இதன் காரணமாக அவர்களை ஓரகடம் காவல் துறையினர் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் மீது வழக்கு

ஆனால் தொழிலாளர்களுடன் கைதுசெய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 22 மீது ஆறு பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், 2021 டிசம்பர் 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தொழில் துறைக்கான அரசு கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

உற்பத்தி தொடங்க வாய்ப்பு

இந்நிலையில் இன்று (ஜனவரி 12) ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆயிரம் தொழிலாளர்களின் உதவியுடன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி தொடங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தொடர்ச்சியாக உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது என அதன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சம்பள பாதுகாப்பு

இது குறித்து சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தெரிவிக்கையில், "ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படியில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை நிரந்தமாகப் பணி அமர்த்த வேண்டும். தங்கும் விடுதிகளில் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பள பாதுகாப்பு வேண்டும். ஃபாக்ஸ்கான் நிர்வாகம் தாங்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வேலையை வழங்கவில்லை.

சம்பளம் வழங்குவது குறித்து தெளிவான முடிவை தெரிவிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவார்களா என்ற கேள்விக்குறி தான் எழுந்துள்ளது. தங்கும் விடுதிகள் உட்பட அனைத்தும் அரசின் நேரடி பார்வையில் இருக்க வேண்டும்.

பெண் தொழிலாளர்கள் தாங்கள் எங்கு தங்க வேண்டும் என்ற உரிமை அவர்களிடத்தில்தான் உள்ளது. ஃபாக்ஸ்கான் நிர்வாகத்திடம் இருக்கக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால் இன்னும் 20 நாள்களில் மீண்டும் ஓர் போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!'

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details