தமிழ்நாடு

tamil nadu

'டீ குடிக்கும்போது ஈபிஎஸ்ஸை ஒழிக்கச் சொன்னார் செங்கோட்டையன்’ - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

By

Published : May 21, 2023, 9:16 AM IST

தேநீர் அருந்த அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை ஒழித்தே தீர வேண்டும் என செங்கோட்டையன் கூறினார் என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

‘டீ குடிக்கும்போது ஈபிஎஸ்சை ஒழிக்கச் சொன்னார் செங்கோட்டையன்’ - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு
‘டீ குடிக்கும்போது ஈபிஎஸ்சை ஒழிக்கச் சொன்னார் செங்கோட்டையன்’ - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

வைத்திலிங்கம் மேடைப்பேச்சு

ஈரோடு:கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைத்திலிங்கம், புகழேந்தி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமிக்கு திமிரு அதிகமாகிறது.

அதைத் தொண்டர்களாகிய நீங்கள்தான் அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் வகுத்த விதியை, ஜெயலலிதா கட்டிக் காத்த விதியை காலில் போட்டு மிதித்து, பத்து மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், பத்து மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும், 5 வருடம் கட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றெல்லாம் திருத்தத்தைக் கொண்டு வந்து, பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொண்டர்கள் ஏற்கவில்லை. அவருடைய அடிமைகள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னையும், மனோஜ் பாண்டியனையும் சட்டமன்றத்தில் செங்கோட்டையன் இருக்க விடமாட்டார். செங்கோட்டையன் தேநீர் அருந்த அழைத்துச் சென்று, எடப்பாடி பழனிசாமியை ஒழித்தே தீர வேண்டும் என்றும், என்னிடம் நிறைய மாவட்டச் செயலாளர் ஆதரவு தர உள்ளனர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் எனவும் கூறுவார்.

ஆனால், செங்கோட்டையன் திடீரென பல்டி அடித்து ஒரு இரவில் எடப்பாடி பழனிசாமி உடன் ஓடிவிட்டார். செங்கோட்டையன் மூத்த நிர்வாகி. நாங்கள் மதிக்கக்கூடிய ஒரு நபர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகின்ற நேரத்தில், செங்கோட்டையன் முதலமைச்சர் ஆவார் என்று கூட பேசிக் கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமியை விட மிகக் கேவலமான ஆளாக செங்கோட்டையன் மாறி விட்டார். உங்களை (பொதுமக்கள்) ஏமாற்றி கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்று வந்தார். இனி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் செங்கோட்டையன் வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்புதான் எனத் தெரிகிறது.

நீதிமன்றம் அதிமுக சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்லவில்லை. தேர்தல் ஆணையம் கர்நாடகத் தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளது. அடுத்த மாதம் நீதிமன்ற தீர்ப்பு வர உள்ளது. நிச்சயமாக நீதி வெல்லும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப நீதி வெல்லும்.

மீண்டும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் ஒன்று பட வேண்டும். அதில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என அனைவரும் இணைந்தால் மட்டுமே, இந்த இயக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற முடியும். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சிக்கு வர முடியும்.

இல்லையென்றால், ஒரு இடம் கூட நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இதனை பொதுமக்களாகிய நீங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எடுத்துச் செல்லுங்கள். நாங்களும் சொல்லி விட்டோம். இல்லையென்றால், எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கி விட்டு நாங்கள் அனைவரும் ஒன்றிணையும் காலம் வரும். நிச்சயமாக அண்ணா திமுக ஒன்று சேரும். மீண்டும் ஆட்சிக்கு வரும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வருவோம். அதிமுக கட்சியும், ஆட்சியும் நூறு ஆண்டு காலம் தமிழ்நாட்டில் இருக்கும். விரைவில் இதற்கு விடிவு காலம் பிறக்கும். ஒத்து வந்தால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருக்கலாம். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு நாங்கள் ஒன்றுபட்டு இந்த இயக்கத்தை வளர்ப்போம். இயக்கத்தை கட்டிக் காப்போம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:எங்க ஏரியா உள்ள வராத..! சேலத்தில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர்

ABOUT THE AUTHOR

...view details