தமிழ்நாடு

tamil nadu

சத்தியமங்கலத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 12:21 PM IST

Post Monsoon Wildlife Survey: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்திற்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு, வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறை ஊழியர்கள்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறை ஊழியர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இவ்வனப் பகுதியில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மழைக் காலத்திற்கு முன், மழைக் காலத்திற்குப் பின் என 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, மழைக்காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு இன்று (டிச.20) தொடங்கி டிசம்பர் 25ஆம் தேதி வரை என 6 நாட்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனச்சரகங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு குழுவினரும் தனித்தனியாக வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளின் கால்தடம் மற்றும் எச்சத்தை அளவீடு செய்து, எச்சத்தைச் சுற்றி ஒரு மீட்டர் சுற்றளவிற்கு புற்கள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வனவிலங்குகள் எச்சத்தை, வெயில்படும் இடங்கள், நிழல் பகுதிகள், நீர்நிலைகள் உள்ள பகுதி மற்றும் மேட்டுப்பாங்கான பகுதிகளில் இடுகின்றனவா எனவும், எச்சங்கள் மறைய ஆகும் கால அளவு குறித்தும், ஜிபிஎஸ் கருவி, ரேஞ்ச் பைண்டர், காம்பஸ் உதவியுடன் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (டிச.20) விளாமுண்டி வனப்பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் யானையின் கால் தடம் மற்றும் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதில் 3 நாட்களுக்கு பகுதி வாரி கணக்கெடுப்பும், 3 நாட்களுக்கு நேர்கோட்டுப்பாதை கணக்கெடுப்பும் நடைபெறுவதாகவும், மொபைல் செயலியைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:ஈரோட்டில் களைகட்டிய இயற்கை உணவு கண்காட்சி; பார்வையாளர்களைக் கவர்ந்த பாரம்பரிய உணவு வகைகள்!

ABOUT THE AUTHOR

...view details