தமிழ்நாடு

tamil nadu

புதிய கட்டுமானம்: அமைச்சர் கூறிய நிபந்தனைகள் என்னென்ன?

By

Published : Dec 26, 2022, 6:28 PM IST

முழு கட்டுமானப் பணிகளுக்கு பிறகே, Completion certificate வழங்கப்படும் எனவும்; இதில் ஏதேனும் விதிமீறல் இருந்தால் கட்டடத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

புதிய கட்டுமானம்: அமைச்சர் கூறிய நிபந்தனைகள் என்னென்ன?

ஈரோடுமாவட்டம், பெருந்துறையில் கீழ்பவானி கால்வாயில் உடைப்பு சீரமைக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் செல்வதை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (டிச.26) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 10ஆம் தேதி கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இரவு பகலாக அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் கரைகளில் சிறிய பணிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அவற்றையும் ஓரிரு தினங்களில் முடிப்பார்கள். தற்போது கால்வாயில் உடைப்பு சீரமைக்கப்பட்ட பகுதியில் விநாடிக்கு 800 கன அடி அளவிற்கு நீர் சென்று கொண்டிருக்கிறது. கால்வாயில் விநாடிக்கு 2000 கன அடி அளவிற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர் நாளை (டிச.27) பிற்பகல் இந்தப் பகுதிக்கு வந்து சேரும்.

தொடர்ந்து மழை இருப்பதால், பாசனத்திற்கு நீர் விரைந்து செல்கிறது. நாளை மாலைக்குள் கடைமடை பகுதியை நீர் சென்றடையும். புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் கடந்த காலங்களைப் போல், அனுமதிக்கப்பட மாட்டாது. கடந்த காலங்களில் கட்டட அனுமதி பெற்றால் போதும். ஆனால், தற்போது அவ்வாறு இல்லை.

முழு கட்டுமானப் பணிகள்-Completion certificate:அனுமதி வழங்குவது மட்டுமல்லாமல் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியில் Completion certificate வழங்கப்படும். அந்த சான்று இருந்தால் மட்டுமே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற முடியும். விதி மீறி இருந்தால் கட்டடம் பூட்டி சீல் வைக்கப்படும். அரசுத்துறை, தனியார் துறை, கட்டுமான நிறுவனங்கள் அனைவரும் சட்ட திட்டங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து அரசு துறைகளுக்கும் இது தொடர்பாக விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளோம்.

விதிமீறியவர்கள் யாரும் தப்பிக்க முடியாது:விதி மீறிய கட்டடங்களை பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மீது வருத்தப்பட வேண்டாம். எனவே, பொதுமக்கள் முறையாக அனுமதி பெற்றதன்படி மட்டுமே கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமீறல்களுக்கு கட்டட உரிமையாளர் மட்டும் பொறுப்பல்ல. கட்டுமான நிறுவனங்களும், பொறியாளர்களுமே பொறுப்பு. உரிமையாளர் கூறினாலும் விதிகளை மீறி கட்ட பொறியாளர் அனுமதிக்கக்கூடாது.

சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 285 வரைபடங்களில் ஆய்வு செய்ததில், 26 இடங்களில் விதி மீறல் இருந்தன. நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில் 9 தவிர, மற்றவை சரி செய்யப்பட்டன. இந்த 9 கட்டடங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிப்பதில் அதிகாரிகள் பற்றாக்குறை இருந்தது.

48 பேர் இருக்க வேண்டிய இடங்களில் 16 பேர் மட்டுமே இருந்தார்கள். தற்போது புதியதாக 27 பேர் நியமிக்கப்பட்டு பயிற்சியில் இருக்கின்றனர். ஜனவரி இறுதியில் அவர்கள் பொறுப்பேற்க உள்ளனர். விதி மீறிய பழைய கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சில மாற்றங்களை நீதிமன்றத்தில் கேட்டிருக்கின்றோம். நீதிமன்ற வழிகாட்டுதல் படி வீதி மீறிய பழைய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க: "பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் நல்லக்கண்ணு"

ABOUT THE AUTHOR

...view details