தமிழ்நாடு

tamil nadu

மாநில எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? ஐஜி பவானீஸ்வரி முக்கிய தகவல்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 10:09 AM IST

Updated : Dec 31, 2023, 1:09 PM IST

IG K Bhavaneeswari IPS: தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருவதாக கோவை மேற்கு மண்டல ஐஜி கே.பவானீஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.

IG K Bhavaneeswari IPS press meet
ஐஜி பவானீஸ்வரி பேட்டி

கோவை மேற்கு மண்டல ஐஜி கே.பவானீஸ்வரி பேட்டி

ஈரோடு:தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ள சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் 14 கி.மீ. தூரம் 1,548 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று (நவ.30) நடைபெற்றது.

இதில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி கே.பவானீஸ்வரி கலந்து கொண்டு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்தார். பின்னர் இது குறித்து பேசிய அவர், 'தமிழகத்தில் முதல்முயற்சியாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்களிப்போடு குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவதற்கு ஏதுவாக சத்தியமங்கலத்தில் 'மூன்றாவது கண்' எனப்படும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.

முதல்கட்டமாக, 250 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதில், 10-க்கும் மேற்பட்ட குற்றங்களைத் தடுக்க முடிந்தது. மேலும் பிற இடங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளது.

இதனையடுத்து அடுத்த கட்டமாக, 1,250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த கேமாரக்கள் இரவு நேரத்தில் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியவை. மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் தனியாக வசிக்கும் முதியோர்கள், தம்பதிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு 'காவலர் செயலி' பதிவேற்றம் செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் வசிக்கும் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொள்வதோடு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் சாலையோர விபத்துகளை தடுக்க, சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்காமல் அதற்கென உள்ள இடங்களில் வாகனங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கையாக வனத்துறையினருடன் இணைந்து வன எல்லையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம். கிராமங்களில் புதிய நபர் வருகை குறித்து கிராமமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதால் சமூக விரோதிகள் ஊடுருவல் இல்லை.

சைபர் கிரைம் தற்போது அதிகரித்துள்ளது. செல்போனில் ஈஸியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற மெசேஜ்-யை அனுப்பி அவர்களின் வங்கி கணக்கைக் கேட்டு பண மோசடி செய்யப்பட்டு வருவதை தடுக்கவும், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:தேசிய அளவிலான செஸ் போட்டி: 4 பிரிவுகளில் தமிழக அணி தங்கம் வென்று அசத்தல்!

Last Updated : Dec 31, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details