தமிழ்நாடு

tamil nadu

திண்டுக்கல்லில் இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

By

Published : Jul 11, 2023, 7:40 AM IST

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழையின்போது, இடி மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

woman has died struck by lightning
இடி தாக்கி பெண் ஒருவர் பலி

திண்டுக்கல் அருகே இடி தாக்கி பெண் ஒருவர் பலி!

திண்டுக்கல்: தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நேற்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை வேளையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 2 மணி நேரம் திண்டுக்கல் நகர்ப்புற பகுதிகளான பாலகிருஷ்ணாபுரம், சிலப்பாடி, வாணி விலாஸ் மேடு, வெள்ளோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தாடிக்கொம்பு, ஆத்தூர், சின்னாளபட்டி போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் சாலையில் உள்ள உத்தனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (45). இவர் கட்டட சித்தாள் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி அருகே உள்ள பிடபிள்யூடி காலனி செல்வி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனையடுத்து பணியாளர்கள் அனைவரும் கட்டிடத்திற்கு கீழே வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் சிறிது நேரம் கழித்து மழை லேசாக நின்றதால் கட்டிடத்தில் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த கான்கிரீட் பகுதியை மூடி வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மல்லிகா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கு வந்த இடத்தில் கூலித் தொழிலாளி இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் 27 வயது பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கனமழை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: Himachal flood: மழையின் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்ட நூற்றாண்டு பழமைமிக்க பாலம்!

ABOUT THE AUTHOR

...view details