தமிழ்நாடு

tamil nadu

தடை செய்யப்பட்ட போதும் ஆன்லைன் மூலம் விற்கப்படும் லாட்டரி ...

By

Published : Aug 11, 2022, 7:32 AM IST

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆன்லைன் லாட்டரி விற்பனை தடை செய்யப்படுமா?
ஆன்லைன் லாட்டரி விற்பனை தடை செய்யப்படுமா?

திண்டுக்கல்:தமிழ்நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்த லாட்டரி விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது லாட்டரி விற்பனையாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் குழுக்களில் லாட்டரி விற்பனையை தொடங்கியுள்ளனர். இதில் ஒவ்வொரு வாட்ஸ் ஆப் குழுக்களிலும் கேரளா லாட்டரி என அறிவித்து லிங்க் அனுப்புகின்றனர். இந்த லிங்கை கிளிக் செய்தால் உடனடியாக வாட்ஸ் ஆப் குழுவிற்குள் செல்கிறது.

ஆன்லைன் லாட்டரி விற்பனை தடை செய்யப்படுமா?

அதில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கேரளா, நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூர் போன்ற பல்வேறு மாநில லாட்டரிகள் பதிவிடப்படுகின்றன. இந்த லாட்டரிகள் ரூ.25, ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.200 என்ற விலையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஒரே எண்ணைக் கொண்ட லாட்டரிகள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த லாட்டரிகளை வாங்குவதற்கு தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல் உள்ளூர் பகுதியில் லாட்டரி விற்பனையாளர்கள் ஒன்று முதல் பத்தாயிரம் வரை என அவர்களின் எண்களை எழுதி வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவருக்கு 25,000 ரூபாய் முதல் 5 லட்சம் வரை பல பரிசுகளை வழங்குகின்றனர்.

மேலும் லாட்டரி விற்பனையானது சுமார் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாட்ஸ் ஆப் குழுக்களில் புதுப்பித்துக் கொண்டே வரப்படுகிறது. இதில் கேரளா, நாகலாந்து மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களின் லாட்டரிகள் ஒரு மணி, ஆறு மணி மற்றும் இரவு 8 மணி என மூன்று முறை வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப ரீதியிலான லாட்டரிகள் தொடர்ந்து விற்பனையாகின்றன. இதனிடையே திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பாஸ்கரன் பொறுப்பேற்றவுடன், அதிரடி நடவடிக்கையாக பல லாட்டரி விற்பனையாளர்களை கைது செய்தார்.

இருப்பினும் மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும், குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையம், பூ மார்க்கெட், காய்கறி சந்தை, அரசமரம் மெயின் ரோடு, சக்தி தியேட்டர், கோவிந்தாபுரம், ஆரம் காலனி, ஹெச்.ஓ.காலனி, நாகல் நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் லாட்டரி விற்பனை பரவலாக நடைபெறுகிறது.

இவர்கள் அனைவரும் தொலைபேசி மூலமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதால், யாரும் உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பத்தை பலப்படுத்தியுள்ளனர். எனவே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது போன்ற தொழில்நுட்ப ரீதியான லாட்டரி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கடன் தொல்லையில் சிக்கியவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு - அரை மணி நேரத்தில் நடந்த அற்புதம்!

ABOUT THE AUTHOR

...view details