தமிழ்நாடு

tamil nadu

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை; 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 11:45 AM IST

Updated : Nov 9, 2023, 1:34 PM IST

Ayyalur Goat Market: வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

3 crore worth goat sold in Ayyalur Goat Market due to diwali festival
தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை

திண்டுக்கல்: இன்னும் இரு தினங்களில் வரவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் ஆட்டுச் சந்தையில் இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்வதற்கான சந்தை நடைபெறும். அய்யலூர் ஆட்டுச்சந்தை திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாகத் திகழ்கிறது.

இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அய்யலூரில் ஆட்டுச்சந்தை கூடியது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கடந்த முயன்ற சுறா துடுப்புகள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பலே நபர்!

அதிகாலை 3 மணி முதலே ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் அப்பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே உள்ள சாலை வரை கூட்டம் அலைமோதியது. மேலும், ஆடுகளின் விலை அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

10 கிலோ எடையுள்ள வெள்ளாடு 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 9 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 500 வரையிலும், சண்டைக்குப் பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் சேவல்களைச் சண்டையிட வைத்து வாங்கி சென்றனர்.

அய்யலூர் சந்தையில் இன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை!

Last Updated : Nov 9, 2023, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details