தமிழ்நாடு

tamil nadu

தருமபுரியில் 16 ஆண்டுகள் ஓடாத தேர்; சீரமைக்கும் பணியைத் துவங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 11:52 AM IST

Temple theer restoration work: தருமபுரியில் கடந்த 16 ஆண்டுகளாக ஓடாத தேரை சீரமைக்க ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

Temple theer restoration work
தருமபுரியில் 16 ஆண்டுகள் ஓடாத தேர் சீரமைக்கும் திருப்பணி

அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தருமபுரி:நல்லம்பள்ளி அடுத்த கோபாலப்பட்டி கிராமத்தில் உள்ள பேட்ராய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்யும் பணியினை நேற்று (செப். 14) அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் ஆலயத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தருமபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வர் மற்றும் பரவச வாசுதேவர் கோயிலுக்குச் சொந்தமான தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கு கடந்த 16 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் உள்ளது. ஆகையால் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அந்த தேரை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வரும் தை மாதத்தில் திருத்தேர் உலா வருவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை டிஜிபிஎஸ் கருவி மூலம் நில அளவையாளர்களை கொண்டு அளவிடும் பணியானது, கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாப்பூர் திருக்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வரை 50 ஆயிரமாவது ஏக்கர் நிலங்களை அளவிடும் பணியானது காஞ்சிபுரத்தில் முடிவுற்றுள்ளது. தற்போது 50 ஆயிரத்து 1வது ஏக்கர் நிலம் அளவிடும் பணியை தொடங்கி வைத்தோம்.

அதனைத் தொடர்ந்து, நில அளவையாளர்களை கொண்டு 1 லட்சம் ஏக்கர் நிலம் அளவிடும் பணி திருவள்ளுா் மாவட்ட பவானி திருக்கோயிலில் முடிவுற்று, 1 லட்சத்து 1வது ஏக்கர் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001-வது ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி பேட்ராய சுவாமி கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காலபைரவர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளான திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறுகின்ற காலபைரவர் வழிபாட்டின் போது விளக்கு ஏற்றுகின்ற வகையில் விளக்கேற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து வித வசதிகளையும் ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் தருமபுரி கோட்டைக்கோயில் மல்லிகார்ஜூனேஸ்வர் மற்றும் பரவாசுதேவர் திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது மண்டல மற்றும் மாநில குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்காக ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் இ-டென்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த டென்டர் உறுதி செய்யப்பட்ட பிறகு விரைவாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது இந்த திருக்கோயிலில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் தேர் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேர் பணிகள் நிறைவுபெற்று, வருகின்ற தை மாதத்தில் பக்தர்கள் வணங்குவதற்கு ஏதுவாகவும், தேர் உலா வருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, இணை ஆணையர் சபர்மதி, தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: PAK Vs SL: பாகிஸ்தானை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றிய இலங்கை அணி!

ABOUT THE AUTHOR

...view details