தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை : மாணவரின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு!

By

Published : Sep 13, 2020, 12:48 PM IST

தருமபுரி : நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு!
மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு!

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்த டிராக்டர் வியாபாரி மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியின் மகன் ஆதித்யா.இன்று (செப்.13) இவர் இரண்டாவது முறையாக இன்று சேலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று (செப்.12) வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மாணவரின் உடலை தருமபுரி நகரக் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை உடற்கூறாய்வு நடைபெற்ற நிலையில், உயிரிழந்த மாணவரின் உடலுக்கு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் பெற்றோர் தங்கள் சம்மதமில்லாமல் உடற்கூறாய்வு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்து, உடற்கூறாய்வு செய்யும் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, “மாணவர் ஆதித்யா, ஆன்லைனில் நீட் தேர்வுக்காக படித்தார். அதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த நிலையில், பெற்றோரிடமும் தான் இந்த முறை தேர்வாகிவிடுவதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏன் உயிரிழந்தார் என்பது தெரியவில்லை என்றுதான் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

தருமபுரி மாணவரின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு!

தொடர்ந்து, உயிரிழந்த மாணவரின் பெற்றோரிடம் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவரின் உடல், சேலம் மாவட்டம் பூசாரிபட்டியலில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க:கனவுகளுடன் சிறகடித்த மாணவச் செல்வங்களை கொன்று புதைக்கும் நீட் தேர்வு... மனம் இறங்குமா மத்திய, மாநில அரசுகள்?

ABOUT THE AUTHOR

...view details