தமிழ்நாடு

tamil nadu

தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி.. தருமபுரியில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 9:07 PM IST

Farmer destroying tomato crops: தருமபுரி அருகே பயிரிடப்பட்ட தக்காளி செடிகளில் நோய் தாக்கம் ஏற்பட்டதால், டிராக்டர் மூலம் உழுது அழித்துள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை அழித்த விவசாயி
வைரஸால் பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை அழித்த விவசாயி

தக்காளி செடிகளை அழித்த விவசாயி

தருமபுரி: பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். அப்பகுதிகளில் விளையும் தக்காளிகள் உள்ளூர் மற்றும் சேலம், திண்டுக்கல், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் அப்பகுதிகளில் இயங்கி வரும் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம், ஒரு நாற்று 1.50 ரூபாய் என்று வாங்கி நடவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பி.கொல்லஹள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, சோமனஹ்ள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்யப்பட்டிருந்த தக்காளிச் செடிகளில் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தது.

இதனால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் போன்ற பாதிப்புகள் காணப்பட்டன. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி விளைவிக்க 1 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தக்காளி பயிர்களில் பரவும் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்திக்கும் நிலையில், ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும், அதைவிடக் குறைவான விலைக்கு விற்பனை செய்ப்படவதாகாவும் கூறப்படுகின்றன. இந்நிலையில் பி.கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளிச் செடிகளில் ஏற்பட்ட நோய் தாக்குதலைக் கண்டு விரக்தியில், டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு - இயற்கை விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்து, ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டது. அச்சமயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் லட்சங்களிலும், கோடிகளிலும் இலாபத்தை ஈட்டினர். ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் தலைகீழாக மாறி, தக்காளி பயிரிடச் செலவு செய்யும் பணத்தைக் கூட ஈட்ட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு, தக்காளி கூடைகளுடன் வந்த விவசாயிகள், தக்காளி விலை உயர்ந்த காலங்களில் அரசு மானிய விலையில் மக்களுக்குத் தக்காளி விற்பனை செய்ததை போல, தற்போது விவசாயிகள் நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் எரிவாயு வெளியேற்றம்..! கிராம மக்கள் அச்சம்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details