தமிழ்நாடு

tamil nadu

தொப்பூர் கணவாய் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு.. ரூ.775 கோடியில் அமைகிறது 'மேம்பால சாலை' - தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 3:51 PM IST

Thoppur New road project: தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தைத் தடுக்க ரூ.775 கோடியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற இருப்பதாக தருமபுரி எம்.பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

DHARMAPURI MP
எம்.பி செந்தில்குமார்

தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தைத் தடுக்க ரூ.775 கோடியில் சாலை சீரமைப்பு பணி

தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் செல்லும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை NH.44-இல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றனர். இங்கு, நாள்தோறும் ஏதாவது ஒரு சிறு விபத்து, உயிரிழப்பு உள்ளிட்டவை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில், தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையை மாற்றுப் பாதையில் சீரமைத்தால் விபத்துக்களைத் தடுக்க முடியும் என்பதால், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்ந்த உயர் அலுவலர்களைத் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வந்ததார்.

இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "மத்திய அரசு ரூ.775 கோடி மதிப்பீட்டில் 6.6 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க ஒப்பந்தம் கோரி உள்ளது. சாலை அமைக்கப்பட்டால் உயிரிழப்பு குறையும். இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரமும் குறையும். இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலன்" என்றார்.

மேலும், "இந்தியாவிலேயே தொப்பூர் கணவாய் பகுதியில் தான் அதிக விபத்துக்கள் நடைபெறும் என்ற நிலை மாறும். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எங்கு சென்றாலும் நான்கு வழி சாலை உள்ளது. பெங்களூரு செல்ல இரண்டு புதிய வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளை விட அதிகமான போக்குவரத்துக்கு மற்றும் விவசாயத்திற்கு தேவையான அதிக நிதியை பெற்று தந்திருக்கிறோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் அழகு திட்டத்திற்கு ரூ.7800 கோடி நிதியில், ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.4000 கோடியும், ஜிக்கா விடம் இருந்து மீதமுள்ள தொகையும், பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தருமபுரி தொகுதி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தருமபுரி செயலாக்கத்திற்கு வந்துள்ளது" என வீடியோவில் கூறி உள்ளார்.

முன்னதாக, இந்த பகுதியில் அதிவேகமாக வாகனங்களில் செல்லக் கூடாது, நொடியில் மரணம், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளைப் பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், மக்கள் கூடும் இடங்களில் பதாகைகளை வைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் மிக கவனமாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:ஈரோட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வடமாநிலத்தவர் சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details