தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19 தடுப்பூசி முகாம் : தர்மபுரியில் 10 ஆயிரத்து 850 பேர் முன்பதிவு!

By

Published : Jan 16, 2021, 4:53 AM IST

தர்மபுரி : கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 850 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Covid 19 Vaccination Camp: 10 thousand 850 people booked in Dharmapuri
கோவிட்-19 தடுப்பூசி முகாம் : தர்மபுரியில் 10 ஆயிரத்து 850 பேர் முன்பதிவு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசிகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், நாடு தழுவிய தடுப்பூசி போடும் முகாம் இன்று (ஜன.16) தொடங்கப்படவுள்ளது. அத்துடன், கோ-வின் எனும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார். தமிழ்நாட்டில் 307 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கவிருக்கிறது. அந்த வகையில், இன்று (ஜன.16) தர்மபுரி மாவட்டத்தில் நான்கு மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன் தலைமையில் நேற்று (ஜன.15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெமினி, இணை இயக்குநர் மருத்துவர் திலகம் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்

இதனையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து போடப்படும் மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி, அரூர் அரசு வட்டார மருத்துவமனை,பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் ஒருநாளைக்கு தலா 100 பேர் வீதம் 400 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதற் கட்டமாக இதற்காக 11 ஆயிரத்து 800 கரோனா தடுப்பூசிகள் தர்மபுரியை வந்தடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தடுப்பூசி நடைமுறைக்கு வரும் அடுத்த சில மாதங்களில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 30 கோடி மக்களுக்கு ஊசி போடுவதை இலக்காக வைத்து மத்திய சுகாதார அமைச்சகம் செயல்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை!

ABOUT THE AUTHOR

...view details