தமிழ்நாடு

tamil nadu

என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

By

Published : Feb 1, 2023, 2:02 PM IST

அன்புமணி என்றால் decent And development politics னு அவன் நினைத்துள்ளான். வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது என மேடையிலே வேட்டி மடித்து கட்டி அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்
என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்

"என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்": அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூர்: கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நீர், நிலம், விவசாயம் காப்போம் விளக்க பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது:- "வளமாக இருந்த கடலூர் மாவட்டம் சீரழிந்து வருகிறது. கடலூர் சிப்காட் பகுதியில் ரசாயன கழிவுகள் அதிகமாக இருந்தது. மண், நீர், நிலம் மாசுபட்டு வருகிறது. அடுத்ததாக நெய்வேலியில் 66 ஆண்டுகளாக இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் தன்னுடைய லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்துள்ளது. கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. இதே போல் பரங்கிப்பேட்டையில் சைமா தொழிற்சாலை வர இருக்கிறது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தான் உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். 8 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. தற்போது என்.எல்.சி நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த துடிக்கிறது.

என்.எல்.சிக்கு 2 தமிழ்நாடு அமைச்சர்கள் தரகராக செயல்பட்டு வருகிறார்கள். 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது என்.எல்.சி இந்தியா நிறுவனம் 37 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. இதனால் 25 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இது என்.எல்.சி. பகுதியை சுற்றியுள்ள 49 கிராம மக்கள் பிரச்னை இல்லை. ஒட்டுமொத்தமாக கடலூர் மாவட்ட பிரச்னையாக உள்ளது.

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு 2 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு கொடுக்கப் போகிறார்களாம். ஆனால் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை 2025-ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்க போவதாக மத்திய அரசே தெரிவித்து விட்டது. அப்படி இருக்கும் போது எப்படி வேலை வாய்ப்பு வழங்குவார்கள்.

இது மட்டுமில்லாமல் தற்போது புதிய வீராணம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பகுதியிலுள்ள விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. அவர்கள் 200 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் நிலக்கரி குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

விரைவில் அந்தப் பகுதியிலும் நிலக்கரி எடுக்க போகிறார்கள். ஏற்கனவே வீராணம் ஏரியை சுற்றியுள்ள காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். அவன் நினைத்துள்ளான், அன்புமணி என்றால் decent And development politics-னு. வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது. மேடையிலே வேட்டி மடித்து கட்டி மண்வெட்டியை கையில் பிடித்த படி என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்" எனக் கூறினார்.

காலநிலை மாற்றத்தால் பருவமழை குறைந்து வருகிறது. என்.எல்.சி. பிரச்னை குறித்து போராட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தால் அவர்கள் வருவதில்லை. எந்த கட்சிகளும் வரவில்லை. காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய வறட்சி ஏற்படும். வறட்சியால் உணவு பற்றாக்குறை ஏற்படும். ஆகவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டது போல் கடலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த வரவேண்டும்.

டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறிக்க துடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏன் போராட்டம் நடத்த வரவில்லை. என்எல்சி நிறுவனத்திற்ககு ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம். இதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம். இதில் விவசாயிகள், அனைத்துக் கட்சிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

நெய்வேலி பிரச்னையில் இரு வேறு கொள்கைகளை திமுக கொண்டுள்ளது. திமுக விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனது கொள்கையை தெளிவுப்படுத்த வேண்டும். சிப்காட், என்.எல்.சி., சைமா, வீராணம் திட்டம் போன்றவற்றால் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன். ஆகவே இங்குள்ள அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், என்.எல்.சி நிர்வாகத்துக்கு நிலம் எடுப்பதை விட்டு விடுங்கள்.

என்.எல்.சி. நிர்வாகம் இந்த மண்ணை விட்டு வெளியே வர வேண்டும். அதுவரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக இருங்கள். விரைவில் இது பற்றி அறிவிக்கிறேன். பாஜக அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 1500 ஏக்கர் அன்னூர் பகுதியில் எதிர்த்து போராடினார். 25 ஆயிரம் ஏக்கர் இவர்களுக்கு கண் தெரியவில்லையா? என்எல்சி நிறுவனம் மக்களை ஏமாற்றி வருகிறது. என்எல்சி நிறுவனம் வெளியேறும் வரை நாங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்க மாட்டோம்.

இதையும் படிங்க: Budget 2023 Live Updates: 157 புதிய நர்சிங் கல்லூரி

ABOUT THE AUTHOR

...view details