தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - கே.எஸ். அழகிரி பூரிப்பு!

By

Published : May 13, 2023, 4:38 PM IST

2024ல் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கர்நாடக மாநில வெற்றி பூரிப்பில் பேட்டியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்-கே.எஸ் அழகிரி
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்-கே.எஸ் அழகிரி

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - கே.எஸ். அழகிரி பூரிப்பு!

கடலூர்:கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடத்தைப் பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், ”கர்நாடகத் தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். இது ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி. அதற்கு துணை நின்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், கர்நாடகா மக்களை மட்டுமல்ல, இந்தியாவிலே ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி எதிர்மறை அரசியல் செய்யாமல் நேர்மறை அரசியல் செய்தார். இந்திய மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டார். வேறு எந்த நோக்கமும் இல்லை.

அதிகாரத்தை மையமாக வைத்தோ அல்லது தன்னை மையமாக வைத்தோ, அந்த நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. மகாத்மா காந்தியினுடைய தண்டி யாத்திரை போன்று, ஒரு எழுச்சியை ராகுல் காந்தி பெற்றார். கர்நாடகா வெற்றியைத் தாங்கள் பெரிதும் மதிக்கிறோம். வெற்றிக்கு ஒரு காரணம், மோடி அரசாங்கம். மோடியின் கடந்த கால அரசியலும் ஒன்று.

மோடி ஆரம்பத்தில் கவர்ச்சிகரமாக தென்பட்டார். மக்கள் நம்பினார்கள். காலப்போக்கில் பார்க்கின்றபொழுது ஒரு காரியம் கூட நடைபெறவில்லை. மன்மோகன் சிங் ஆட்சி செய்யும் காலத்தில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் விற்றது. 70 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. ரூபாய் 400க்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட்டது. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கிறது.

எனவே, 35 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சமையல் எரிவாயு 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மோடி அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. வரி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைக்கிறார். கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

15 லட்சம் ரூபாய் அனைவரும் வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக் கூறினார். ஆனால், இதுவரை யாருக்கும் கொடுக்கவில்லை. பணமதிப்பு இழப்பு நீக்கம் என்பது ஒரு இந்தியாவை சீரழிவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. தொழில் துறை பெரும் அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்; விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என்றும் தெரிவித்த மோடி இதுவரை குறைந்தபட்சம் கொள்முதல் விலையைக் கூட உயர்த்த முடியவில்லை.

இரண்டு கோடி மக்களுக்கு வேலை என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை வேலையில் இருந்தவர்களின் வேலையும் பறிபோய் விட்டது. இதெல்லாம் மக்கள் பார்க்கின்றபொழுது, இவர்களுடைய செயல் தொலைநோக்கு பார்வையற்ற வெற்றுப் பேச்சு பேசக்கூடியவர்கள் என்பதை மக்கள் உணர்ந்தார்கள்.

இதனால் தான் கர்நாடகத் தேர்தலில் பெரும் தோல்வியை பாஜக சந்தித்தது. ஆகையினால், காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று இருப்பதாகவும் தெரிவித்தார். கர்நாடகத் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் நல்ல முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும். ராகுல் காந்தி, அரசு இந்தியாவை உலகின் தலை சிறந்த வல்லரசு நாடாக மாற்றும். அதற்கான வெற்றி தான் கர்நாடக தேர்தல் முடிவு.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. குதிரை பேரத்திற்காக எந்த இடமும் இல்லை. கர்நாடகத் தேர்தலின் வெற்றி மூலம் கிடைத்த உத்வேகத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மாபெரும் ஆட்சியினை அமைக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?: சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையே போட்டி!

ABOUT THE AUTHOR

...view details