தமிழ்நாடு

tamil nadu

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு!

By

Published : Aug 4, 2023, 9:33 AM IST

பணி நிரந்தரம் செய்யக் கோரி நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Neyveli NLC Contract Workers announce Strike
நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

கடலூர்:நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நிலக்கரி சுரங்கம் I, II மற்றும் அனல் மின் நிலையம் I, II மற்றும் அனல் மின் நிலைய ஒன்று விரிவாக்கம் என செயல்பட்டு வருகின்றன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கையாக பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 27 தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் 517 ஒப்பந்த தொழிலாளர்களை என்எல்சி நிறுவனம் பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்து இருந்தது. இதற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உடன்பாடு இல்லை என தெரிவித்திருந்தனர்.

பணி நிரந்தரம் செய்தால், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 27 ஆம் தேதி முதல் என்எல்சி தலைமை அலுவலகம் சாலையில் காத்திருப்பு போராட்டத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று மாலை என்எல்சி தலைவர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என ஜீவ ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது.

என்எல்சியில் தீ விபத்து:ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் இடங்களிலும், அனல் மின் நிலையங்களிலும் தகுதியற்றவர்களை வைத்து என்எல்சி நிறுவனம் வேலை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் இரண்டாம் சுரங்கம் பகுதியில் நிலக்கரி வெட்டி எடுத்து அனல் மின் நிலையம் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, 2 மணி நேரத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்திற்கு பிறகு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி என்பது மீண்டும் துவங்கியது. இதனால் எந்த ஒரு மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என என்எல்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்எல்சி தலைவர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம்:இதற்கிடையில் என்எல்சி தலைவர் இல்லம் முற்றுகையிடும் போராட்டத்தை முன்னிட்டு நெய்வேலியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியது. என்எல்சி தலைவர் இல்லம் முன் CRPF மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு: இந்நிலையில் மாலை ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சார்பில் நெய்வேலி தலைமை அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தை அடுத்து என்எல்சி தலைவர் இல்லம் முற்றுகை இட்டு போராட்டம் நடத்த பேரணியாக செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து என்எல்சி நிர்வாகம் கொண்டு வந்த அவசர வழக்கில் தலைமை அலுவலகம் முன் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிரித்தும், காவல்துறை அனுமதியோடு தகுதியான வேறு இடங்களில் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேகர் பேட்டி, "நீதிமன்ற வழிகாட்டுதல்படி இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரில் நடத்துவது என்றும், அனைவரும் அங்கு திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இன்று காலை 5 மணி அளவில் அனல் மின் நிலையம் ஒன்றின் முன் முற்றுகை போராட்டம் நடத்தி கைதாவது என்றும் அதைத்தொடர்ந்து தினந்தோறும் அனல் மின் நிலையம் சுரங்கம் போன்ற பல இடங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி விட முடிவு செய்வதாகவும்" தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு: 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்.. தீர்வு கிடைக்குமா?

ABOUT THE AUTHOR

...view details