தமிழ்நாடு

tamil nadu

12 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த தாய்.. எப்படி தெரியுமா?

By

Published : Jun 9, 2023, 6:43 AM IST

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது மாயமான பெண், 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினரோடு சேர்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வை உணர்வுப் பூர்வமாக விவரிக்கிறது இந்த செய்தி.

Women rescued in Covai
கோவையில் பெண் மீட்ப்பு

கோயம்புத்தூர்: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்மராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ராணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு, ராணி திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து காவல் துறையில் ராணியைக் கண்டுபிடித்துத் தரக் கோரி அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

போலீசார் மாயமான ராணியைத் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ராணி மாயமாகி 12 ஆண்டுகள் ஆகி விட்டதால் அவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று உறவினர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால், முனுசாமியும், அவர்களது மகன்களும் ராணி நிச்சயம் உயிரோடுதான் இருப்பார் என்றும், என்றாவது ஒரு நாள் தங்களைத் தேடி வருவார் என நினைத்து மன உறுதியோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை. அவர்கள் நினைத்தது போலவே ராணி உயிரோடுதான் இருந்துள்ளார். சம்பவத்தன்று முனுசாமி மகன் இளவரசனுக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் ”நாங்கள் கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பிலிருந்து பேசுகிறோம்.

உங்கள் தாய் கடந்த 2014ஆம் ஆண்டு கோவையில் சுற்றித் திரிந்தபோது, அவரை மீட்டு நாங்கள் மனநல சிகிச்சை அளித்தோம். குணம் அடைந்த அவரிடம் விசாரித்தபோது உங்கள் பெயரைத் தெரிவித்து, உங்களைச் சந்தித்து, உங்களுடன் செல்ல விரும்புகிறார்” என்ற தகவலைத் தெரிவித்தனர்.

மாயமான தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்த இளவரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக தனது தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தன் தந்தையும், ராணியின் கணவருமான முனுசாமியை அழைத்துக் கொண்டு இருவரும் கோவைக்கு வந்தடைந்தனர்.

நேராக அந்த மையத்திற்குச் சென்ற இருவரும், ராணி குணம் அடைந்து நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்துள்ளனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராணியைப பார்த்த சந்தோஷத்தில் முனுசாமியும், அவரது மகனும் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். மேலும் இத்தனை ஆண்டுகளாக தன்னுடைய மனைவிக்கு உண்ண உணவு, தங்க இடம் கொடுத்தது மட்டுமின்றி மனநல சிகிச்சை அளித்து தனது மனைவியைப் பரிபூரண குணமடையச் செய்த கோவையில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பிற்கு முனுசாமி கண்ணீர் மல்க தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இது குறித்து ராணியின் கணவர் முனுசாமி கூறுகையில், “12 வருடங்களுக்கு முன்பு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ராணி திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும், காவல் துறையில் புகார் அளித்தும் கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில் இருந்தோம். தற்போது உதவும் கரங்கள் அமைப்பின் உதவியால் எனது மனைவி குணம் அடைந்து இருக்கிறார்.

அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை” என தெரிவித்தார். பின்னர், ராணி தன்னை பாதுகாத்து அரவணைத்து சிகிச்சை அளித்து குணமளித்த உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது கணவர் மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:விடுதி அறையில் இளம்பெண் சடலம்.. காவலாளி செய்த கொடூர சம்பவம்.. மும்பையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details