தமிழ்நாடு

tamil nadu

'தாய் மடியே சுகம்'.. தாயை பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ந்த அழகிய தருணம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 11:35 AM IST

Baby Elephant: வால்பாறையில் தாயை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தாயுடன் சேர்த்த நிலையில், தாய் மடியில் குட்டி யானை நிம்மதியாக உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Baby Elephant Photo
தாயை பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ந்த அழகிய தருணம்

தாயுடன் நிம்மதியாக இளைப்பாறிய குட்டி யானையின் வீடியோ

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகங்கள் உள்ளன. இதில் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச் சரகங்களில் இருந்து வெளியே வரும் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் செல்வது வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிச.28ஆம் தேதி மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது யானைகள் அனைத்து மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில், பிறந்து 4 முதல் 5 மாதங்களே ஆன 'குட்டியானை' ஒன்று கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனையடுத்து, வனப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் குட்டியானை ஒன்று தனியாக சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டியானையை பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு, குட்டியானையை அதன் தாயுடன் சேர்க்க வாகனத்தில் குட்டி யானையை ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் கிளம்பினர். அதனிடையே குட்டி யானையின் யானைக் கூட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க, குட்டியானையை ஆற்று நீரில் குளிக்க வைத்து, பின்னர் காட்டுக்குள் அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவந்தனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, கடந்த டிசம்பர் 30ஆம் தேதி குட்டியானை யானைக்கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. தனது தாயைப் பார்த்ததும், குட்டியானை உற்சாகமாக ஓடிச்சென்று தனது தாயுடன் சேர்ந்து கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் 4 கண்காணிப்பு குழுவினரைக் கொண்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதில், குட்டி யானை தனது யானைக்கூட்டத்துடன் தேயிலை தோட்டப்பகுதிகளில் சுற்றித்திரியும் வீடியோக்களையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இதனிடையே தனது தாயையும், கூட்டத்தையும் பிரிந்து தவித்த குட்டி யானையை, வனத்துறையினர் அதன் தாயுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை குட்டியானையின் நடவடிக்கைகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்போது குட்டியானை தேயிலை தோட்டம் அருகில் உள்ள ஒரு பாறையில், 'தாயின் மடியே சொர்க்கம்' என்றபடி தனது தாயின் அரவணைப்பில் படுத்து நிம்மதியாக உறங்கும் காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகள் தாக்காத நிலையில் மீட்டெடுக்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், வால்பாறை பகுதிக்குள் தனித்தனி குழுக்களாக 300-க்கும் மேற்பட்ட யானைகள் சுமார் 20 குட்டிகளுடன் புதிய வரவாக வந்துள்ளது. மேலும், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் முதலைகள் அட்ராசிட்டி.. குட்டி முதலை மீட்ட வனத்துறையினர்..

ABOUT THE AUTHOR

...view details