தமிழ்நாடு

tamil nadu

ஈஷா மர்ம மரணங்கள்.. அரசு முறையாக விசாரிக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தல்!

By

Published : Mar 21, 2023, 3:27 PM IST

கோயம்புத்தூர் ஈஷா மையத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு, ஈஷாவில் நிகழும் மர்ம மரணங்கள் குறித்து அரசு முறையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஈஷா மர்ம மரணங்கள்.. அரசு முறையாக விசாரிக்க அமைப்புகள் வலியுறுத்தல்!
ஈஷா மர்ம மரணங்கள்.. அரசு முறையாக விசாரிக்க அமைப்புகள் வலியுறுத்தல்!

வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அளித்த பேட்டி

கோயம்புத்தூர்: சர்வதேச காடுகள் தினம், இன்று (மார்ச் 21) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில், கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை கண்டித்தும், தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈஷா நிறுவனர் வாசுதேவை தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என்றும், ஈஷாவில் தொடரும் பல்வேறு மர்ம மரணங்கள் குறித்து விசாரித்து வரும் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஈஷாவிடம் வழங்கப்பட்டுள்ள மின் மயான பராமரிக்கும் ஒப்பந்தங்களை திரும்பப் பெற்று, மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அரசாங்கமே அதனை நடத்திட வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், ஈஷா மையத்திற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு உள்பட பெரியாரிய, மார்க்சிய மற்றும் அம்பேத்கரிய இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு, “உலக வன நாளான இன்று காடுகளை அழிப்பவர்களை எதிர்த்து, இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம். பழங்குடியினர் மக்களின் நிலங்களை ஈஷா நிறுவனர் வாசுதேவ் அபகரித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு, ஈஷாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பவதுதா என்ற கணேசனை அவர்கள் கொலை செய்து விட்டார்களோ என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு, அங்கு நிகழும் மர்ம மரணங்கள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். மேலும் கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான மயானங்களை, ஈஷா பராமரித்து வருவதை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்தார். இதனையடுத்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், “தமிழ்நாடு அரசு ஈஷா மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈஷாவைப் பற்றி விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை வேண்டாம் என வாசுதேவ் கூறிய போதெல்லாம், தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதனைக் கண்டித்துள்ளார். எனவே, ஈஷா மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்’ என கூறினார்.

இதையும் படிங்க:TN Agri Budget 2023: வேளாண் நிதிநிலை அறிக்கை முக்கிய தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details