தமிழ்நாடு

tamil nadu

தொடரும் பாலியல் சீண்டல் தற்கொலைகள்: நம் சமூகம் எங்கு தவறிழைக்கிறது?

By

Published : Nov 14, 2021, 3:20 PM IST

Updated : Nov 14, 2021, 4:13 PM IST

கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கோபத்தையும், பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

sexual harassment
sexual harassment

தமிழ்நாட்டையே கொந்தளிப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியின் தற்கொலை தான். தான் பயின்று வந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்களாலும் அதனை பள்ளியின் நிர்வாகத்திடம் புகார் செய்தும் அவர்கள் விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறி தக்க நடவடிக்கை எடுக்க மறுத்ததன் விளைவாக இன்று ஒரு மாணவி உயிருடன் இல்லை.

இதேபோல் பல சம்பவங்களை நாம் நெடுங்காலமாக பார்த்து வருகிறோம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம்! அவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அம்மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு அந்த ஆசிரியர்கள் தான் காரணம். ஆனால் அம்மாணவியின் தற்கொலை எண்ணத்திற்கும் மரணத்திற்கும் நம் சமூகம் தான் காரணம். இதுவே மறுக்க முடியாத உண்மை.

'வெளிய தெரிஞ்சா உனக்கு தான் அசிங்கம், இத விட்டுடு'

ஆண்டாண்டு காலமாக நாம் கற்பித்து வரும் கற்பிதங்களில் ஒன்று பெண்ணுடல் என்பது புனிதமானது, ஒரு குடும்பத்தின் மரியாதையும் கௌரவத்தையும் கண்ணியத்தையும் தாங்கி நிற்கும் கருவியே அவ்வீட்டின் பெண்கள் தான். பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று பேசியே பெண்களை அந்நியப்படுத்தி வைத்துவிட்டோம். அது போதாதென்று அவர்களுக்கு பேசும் வாய்ப்பை ஒரு போதும் நாம் வழங்குவதில்லை.

பெண்களுக்கு என்ன தேவை, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆண்களே முடிவு செய்யும் தந்தைவழி சமூகமாக நாம் இருந்து வருவதும் இம்மாதிரியான பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளான பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை வெளியே சொல்லாமல் சொல்லவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கியக் காரணம்.

தற்கொலை தீர்வல்ல

பெரும்பாலும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை பெண்கள் பொதுவெளியில் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் அதற்கு பின்னர் எதிர்கொள்ளப் போகும் கேள்விக்கனைகள் தான். “ச்சச, அப்படியெல்லாம் இருக்காது, அவர் பாக்க அந்த மாதிரி ஆளா தெரியவில்லையே, இப்படி ஒரு சம்பவம் நடந்ததா சொல்றியேமா அதுக்கு என்ன ஆதாரம்? வேறு யாராவது இதை பார்த்தார்களா? அவருக்கு அப்படி ஒரு எண்ணம் எப்படி வந்துச்சி? நீ ஏதாச்சும் அவர் கிட்ட சிரிச்சி பேசுனியா? இதெல்லாம் வெளியே தெரிஞ்சா உனக்கு தான கெட்டபெயர், பேசாம கெட்ட கனவா நினைச்சி மறந்துரு” இவை அனைத்தும் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து கூறினால் அவர்கள் முதலில் எதிர்கொள்ளும் இந்த கேள்விகளால் தான் பெரும்பாலும் யாரும் வெளியில் சொல்வதில்லை.

#Metoo - பேசப்படாமல் போய்விட்டது

தற்போது தற்கொலை செய்துகொண்ட மாணவியும் தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் பற்றி பள்ளியில் புகார் அளித்தும் அந்த புகாரை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாவில்லை. ஒருவேளை இப்படியான மனோபாவம் இல்லாமல் குற்றமிழைத்த ஆசிரியருக்கு தக்க தண்டனை வழங்கி மாணவிக்கு நீதி கிடைக்கச் செய்திருந்தால் இந்நேரம் அந்த மாணவியும் உயிருடன் இருந்திருப்பார்.

மேலும் பலரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பார்கள். இப்படியான பாலியல் அத்துமீறல்களை சந்தித்த பெண்கள் உலகளவில் ஒன்றிணைந்து #Metoo என்ற பெயரில் பொதுவெளியில் உரக்க சொல்லியபோதும்கூட நம் தேசத்தில் Metoo அமைப்பு பெரியளவில் பேசப்படாமல் போனதற்கு காரணம் நாம் தந்தைவழி சமூகத்தில் வேரூன்றி இருப்பதால் தான்.

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு உண்டு

பெண் பிள்ளைகள் மட்டுமல்ல, எத்தனையோ ஆண் குழந்தைகளும் இம்மாதிரியான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். பெண்களுக்காக எழுப்பப்படும் குரல்களில் பாதி அளவு கூட ஆண் குழந்தைகளுக்கு எழுப்பப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை. இத்தகைய தற்கொலைகளிலிருந்து குழந்தைகளை நாம் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் அவர்களிடம், “தங்கள் உடல் மீதான முழு உரிமையும் அவர்களுக்கு மட்டும் தான். யாராவது தவறான கண்ணோட்டத்தில் தொட்டாலோ அல்லது பார்த்தாலோ அதற்கு நாம் பொறுப்பல்ல அப்படி செய்பவரையே தான் முழு குற்றமும் சாரும் எனவும் எந்த மாதிரியான அத்துமீறல்கள் நடந்தாலும் தயங்காமல் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அது மட்டுமே சரியான முடிவு” என்பதை நம் பிள்ளைகளின் மனங்களில் ஆழமாக பதிய வைக்க வேண்டிய பொறுப்புணர்வு நம் எல்லோரிடமும் உள்ளது.

இப்போது உடனடியாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? வெளியில் சொல்ல முடியாமல் ஏதாவது விஷயத்தை மனதில் வைத்து கஷ்டப்படுகிறீர்களா? என்று பக்குவமாக அரவணைப்புடன் கேட்க வேண்டும்.

பிள்ளைகள் அமைதியாக எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு இம்மாதிரியான கசப்பான சம்பவம் நடக்காமல் இருந்திருக்கும் என்றில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் செயல்படுவோம்.

இதையும் படிங்க: 'தேவை போக்சோ விழிப்புணர்வு... அழையுங்கள் 14417 என்ற எண்ணுக்கு'

Last Updated :Nov 14, 2021, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details