தமிழ்நாடு

tamil nadu

கோவை பெண் கொலை வழக்கு... சூப் கடை உரிமையாளர் கைது; அம்பலப்பட்ட உறவு!

By

Published : Aug 4, 2023, 10:55 PM IST

கோவையில் ஜூலை 28ஆம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சூப் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர உதவி ஆணையர் பார்த்திபன்

கோயம்புத்தூர்மாவட்டம், சேரன்மாநகரில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர், சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் சக்கரவர்த்தி தோட்ட வேலை மற்றும் பெயின்டர் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி ஜெகதீஸ்வரி வீட்டிலேயே இருந்து, 12ஆம் வகுப்பு படிக்கும் மகளைப் பராமரித்து வந்தார்.

இதனையடுத்து மாலையில் பள்ளிக்குச்சென்று மகளை அழைத்து வரும் தாய் வராததால் சந்தேகமடைந்த அவரது 12ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ரத்தம் வடிய படுக்கையில் அவரது தாய் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவரது அலறம் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது தந்தை வீட்டிற்குள் வந்து ஜெகதீஸ்வரியின் சடலத்தைக் கண்டனர்.

தொடர்ந்து இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து நான்கரை சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைத்து ஆதாயக்கொலையா அல்லது பாலியல் கொலையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து அதன் மூலம் கிடைக்கப்பட்ட தகவலின்படி கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சூப் வியாபாரியான மோகன்ராஜ் என்பவரை காவல் துறையினர் இன்று (ஆக.04) கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர உதவி ஆணையர் பார்த்திபன், “இந்த கொலை வழக்கு தொடர்பாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நான்கு குழு அமைத்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் அதே பகுதியில் முன்பு வசித்து வந்த சூப் வியாபாரியான மோகன்ராஜ் என்பவரை கைது செய்துள்ளோம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீஸ்வரிக்கும் மோகன்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறிய நிலையில் 2021ஆம் ஆண்டு அங்கிருந்து கோவை ராமநாதபுரத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார், மோகன்ராஜ். இது குறித்து சேரன்மாநகர் பகுதியிலிருந்து ரேஸ்கோர்ஸ் வரையிலான சுமார் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.

அதில் மோகன்ராஜ் தனது ஜாவா இருசக்கர வாகனத்தை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது கடையில் நிறுத்தி வைத்து விட்டு, வேறு ஒரு ஸ்கூட்டி வாகனத்தை எடுத்துக் கொண்டு அவினாசி சாலை வரை சென்ற அவர், அங்கு ஒரு ஸ்டிக்கர் கடையில் போலி வாகன பதிவெண்ணை வாங்கி, ஸ்கூட்டியில் ஒட்டி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு மீண்டும் கடைக்கு வரும் வழியில் போலி ஸ்டிக்கரை மாற்றியது தெரியவந்தது.

மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 21ஆம் ஆண்டு வரை மோகன்ராஜ் பாலாஜி நகர் பகுதியில் வசித்த போது இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் அண்மை காலமாக குறைந்ததால் ஜெகதீஸ்வரி மீது சந்தேகம் எழுந்ததாகவும் எப்போதும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வேறு எண்ணிலிருந்து மட்டுமே ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்டதாகவும் கூறியதுடன்; தற்போதும் காவல் துறையை திசை திருப்பவே நம்பர் பிளேட்டை மாற்றியும் சாதாரணமாக தனது பணியை மேற்கொண்டும் வந்துள்ளார்.

ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்டதாக திசைதிருப்பும் வகையில் ஜெகதீஸ்வரியின் நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்போது அவரிடமிருந்து ஒரு ஜாவா இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஸ்கூட்டி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க:ஆம்லெட்டுக்காக மச்சானை கொன்ற மாமன் கைது!

ABOUT THE AUTHOR

...view details