தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த 10,000 பேர்

By

Published : Mar 11, 2023, 3:53 PM IST

Updated : Mar 11, 2023, 4:34 PM IST

கோவையில் மாற்றுக்கட்சியினர் 10 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Other party members joined DMK in presence of Chief Minister Stalin
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கோவை: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நமது இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

40-க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார் எனத் தெரிவித்தார். இந்த விழாவில் பேருரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள் தாய் கழகத்தில் இணைந்துள்ளனர். விவாத நிகழ்ச்சியில் பேசும் அதிமுகவினர் பேச்சை கேட்டால் எனக்கு கோபம், ஆத்திரம் வரும்.

ஆனால், செல்வராஜ் பேசுவதை பார்க்கும் போது கோபம் ஆத்திரம் வராது. அவர் உள் ஒன்று வைத்து, வெளியே ஒன்று பேசமாட்டார். சில சமயங்களில் அவர் திட்டியுள்ளார். திட்ட திட்டத்தான் நாம் வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறோம். கிளுகிளுப்பைகாரன் போல ஏமாற்றி அழைத்து சென்றவர்கள், தாயைத் தேடி வந்திருப்பது போல தாய் கழகத்தை தேடி வந்திருப்பதாக அவர் சொன்னார். அப்படி தாய் கழகத்திற்கு வந்திருக்கும் உங்களை தாய் உள்ளத்தோடு வரவேற்கிறேன்.

திமுகவை பொருத்தவரை தாய் கழகம் என சொல்கிறோம். இந்த கழகத்திற்கு என ஒரு வரலாறு உள்ளது. 1949 ல் அண்ணா கட்சியை துவங்கிய போது ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என ஆரம்பிக்கவில்லை. திடீர் திடீர் என தோன்றும் கட்சிகள் தோன்றும் போதும், தோன்றுவதற்கு முன்பே நான் தான் அடுத்த ஆட்சி, அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். அப்படி தோன்றிய கட்சிகள் அநாதைகளாக அலைந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் திமுக அப்படியல்ல.

1949ல் துவங்கிய கட்சி, 1957ல் தான் தேர்தலில் போட்டியிட்டது. 1967 ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டினார். அண்ணா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்கள் தான், தன்மானத்தோடு தமிழ்நாட்டில் வாழ காரணம். கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்தார். 1975ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி தனக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து காத்துக் கொள்ள, நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.

நெருக்கடி நிலையை எதிர்க்க கூடாது என வந்த தூது குழுவிடம் ஆட்சி இல்லை, உயிர் போனாலும் கவலைப்படமாட்டேன், ஜனநாயகம் தான் முக்கியம் என்றார். அடுத்த நாள் மாநாட்டிற்கு பிறகு, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம். 500 க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடினோம். அப்போதும் கருணாநிதி ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களைப் பற்றி தான் கவலைப்பட்டார். பிறகு 1991ல் விடுதலை புலிகளுக்கு துணை இருப்பதாக பழியை போட்டு ஆட்சியை கவிழ்த்தார்கள்.

இந்த நாட்டில் திமுகவை போல வெற்றி பெற்ற கட்சி எதுவும் இல்லை. தோற்ற கட்சியும் எதுவும் கிடையாது. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாத இயக்கம் திமுக. மக்கள் அன்பை, ஆதரவை பெற்று, 6 வது முறையாக எனது தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் போன்ற சொன்ன திட்டங்களை மட்டுமல்ல, அரசுப்பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமை பெண் திட்டம் போன்ற சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம்.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே நடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு, ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கை தான் காரணம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர, ஆட்சி பீடுநடை போட நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்றே களமிறங்கி வியூகங்கள் அமைத்து பணியாற்ற வேண்டும். மதம், சாதியைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் நாடாளுமன்ற தேர்தல் பணியாற்ற வேண்டும். 40 க்கு 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். மதச்சார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும் முயற்சியில் முழுமையாக ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார். முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை முதல்வர் புகழ்ந்து பேசியபோது செல்வராஜ் கண் கலங்கியபடி அமர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: "தமிழக முதல்வருக்கு காதும் இல்லை, வாயும் இல்லை" - ஹெச்.ராஜா விமர்சனம்!

Last Updated :Mar 11, 2023, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details