தமிழ்நாடு

tamil nadu

செம்மரக் கடத்தல் விவகாரம் : கோவையில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி கைது!

By

Published : Nov 6, 2020, 9:42 PM IST

கோயம்புத்தூர் : ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஒருவர் கோவையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

செம்மரக் கடத்தல் குற்றவாளி கைது
செம்மரக் கடத்தல் குற்றவாளி கைது

ஆந்திர மாநிலம், சித்தூர், கடப்பா மாவட்டங்களின் வனப்பகுதிகளில் விலையுயர்ந்த செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. சர்வதேசச் சந்தையில் இந்த செம்மரக் கட்டைகளுக்கு அதிக மவுசு இருப்பதால் இவற்றை சட்டவிரோதமாக வெட்டி சிலர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

செம்மரக் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், கடத்தல் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும், அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் ஆந்திரக் காவல் துறையினர் சிலரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கோவை, குனியமுத்தூர் காவேரி நகரைச் சேர்ந்த ஹக்கீம் (எ) பாஷா (வயது 41) கடப்பா காவல் துறையினரால் நேற்று (நவ.05) கோவையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

செல்போன் சிக்னலை வைத்து கோவை மாநகரக் காவல் துறையினர் உதவியுடன் அவரைக் கைது செய்து, ஆந்திரக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட பாஷா துணிக்கடை நடத்தி வருகிறார். சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படும் என கோவை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details