தமிழ்நாடு

tamil nadu

தடாகத்தில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 1:51 PM IST

Elephant Attack: கோவை தடாகம் அருகே, உணவு தேடி வீட்டின் கதவை உடைத்து, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வனத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த காட்டுயானைகள்

கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த காட்டுயானைகள்

கோயம்புத்தூர்:தடாகம் அடுத்த தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர், பழனிச்சாமி. இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் குமார் - தங்கமணி தம்பதியினர் 8 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். இவ்வீட்டிற்கு அருகே ராஜேஷ்வரி என்ற மூதாட்டியும் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (ஜன.10) அதிகாலை பொன்னூத்து வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் அதன் குட்டி யானை தாளியூர் கிராமத்துக்குள் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து, முதலாவதாக அப்பகுதியில் உள்ள நடராஜ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த யானைகள், உணவுப் பொருட்களை தேடியது. பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற நிலையில், வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி உள்ளனர். பின்னர், அங்கிருந்து வெளியேறிய யானைகள், அருகில் உள்ள பழனிச்சாமியின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

அங்கு, குமாரின் வீட்டுக் கதவை உடைக்க முயன்ற நிலையில், குமார் மற்றும் அவரது மனைவி கதவை உள்பக்கமாக இருந்து தாங்கி பிடித்துக் கொண்டு சத்தம் எழுப்பியுள்ளனர். ஆனாலும், யானை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளது. இதனால், குமார் தனது மனைவி, மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள பழனிச்சாமி வீட்டிற்குள் சென்று உயிர் தப்பியுள்ளார். யானை கதவை உடைத்து தள்ளியதில் குமாருக்கு கையில் எலும்பு முறிவும், அவரது மனைவிக்கு காலில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தாய் யானை, அருகில் உள்ள மூதாட்டி ராஜேஸ்வரியின் வீட்டு கதவை உடைத்து, உள்ளே சென்று அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுள்ளது. மூதாட்டி வெளியே சென்றிருந்த நிலையில், அவர் உயிர் தப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் யானை புகுந்தது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காயமடைந்த குமார் மற்றும் தங்கமணியை தாளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வனத்துறையில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்த இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பயிர் சேதத்தை தொடர்ந்து, உயிர் சேதம் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இந்த யானைகள் அரிசியை சாப்பிட்டு பழகியுள்ளதால், அரிசியைத் தேடி நாள்தோறும் ஒவ்வொரு வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது.

எனவே, வனத்துறையினர் விவசாயப் பயிர்களை காப்பதோடு மட்டுமில்லாமல், இப்பகுதி மக்களில் உயிர்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினால் மட்டும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details