தமிழ்நாடு

tamil nadu

கோவையில் இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்திய புகார்; கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிரடி விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 1:45 PM IST

Muslim school girl complaint issue: கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்தியதாக கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Muslim school girl complaint issue
பள்ளி மாணவி புகாரின் அடிப்படையில் விசாராணை

கோயம்புத்தூர்: கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி, நேற்று (நவ.21) கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில், தனது பெற்றோருடன் கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை நேரில் சந்தித்து, மாணவி பயிலும் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீதும், பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், வகுப்பு ஆசிரியர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதை மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியர் குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியர் மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது ‘உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி தெரிவித்தபோது, ‘மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி..’ என்று மாணவியைப் பார்த்து சொன்னதாகவும், அதற்கு அந்த மாணவி தனது பெற்றோரைப் பற்றியும், அவரது தொழிலைப் பற்றியும் ஏன் பேசுகிறீர்கள் என்று பதிலுக்கு பேசியதாகக் கூறுப்படுகிறது.

அதில் ஆத்திரமடைந்த ஆசிரியை, மாணவியை கன்னத்தில் அடித்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து பெற்றோருடன் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட பொழுது, அவரும் "மிரட்டுகின்றீர்களா" என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று சகமாணவிகள் மத்தியில், தனது ஷூவை துடைக்க வைத்தும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால், தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு உள்ளது என்ற அச்சமாக இருப்பதாகக் கூறி, மாணவி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த புகார் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி நேரடியாக பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும், இது குறித்து மாநகர காவல் உதவி ஆணையர் சந்திரசேகரும், துடியலூர் காவல் நிலைய போலீசாரும் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியின் தரப்பில் அவரது பெற்றோர் அளித்துள்ள புகார் பொய்யானது எனவும், எதற்காக இந்த புகார்கள் கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும், புகாரில் குறிப்பிட்டது போன்று சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கல்வித்துறை மற்றும் காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: நரிக்குறவ இளைஞரை கத்தியால் குத்திவிட்டு ரயிலில் தப்பிய சைக்கோ நபர்.. புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details