தமிழ்நாடு

tamil nadu

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!

By

Published : Oct 26, 2022, 3:17 PM IST

கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் மாநில சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

w
w

கோயம்புத்தூர்:கடந்த 23ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். விசாரணையில் அவர் பெயர் ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல் துறையினர் அவருடைய வீட்டில் சோதனை செய்ததில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்ததாகவும், அதனைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாகவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்து (உபா) எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த வாரம் டிஜிபி சைலேந்திரபாபு இரண்டு நாள்கள் கோயம்புத்தூரில் முகாமிட்டு கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (அக்.26) NIA கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும், ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக்குப் பின், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து இன்று மாலைக்குள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details