தமிழ்நாடு

tamil nadu

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை.. புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 7:42 PM IST

Jos Alukkas jewellery CCTV footages released: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் சில சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளில் வரும் நபர் சந்தேகிக்கும் நபராக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Jos Alukkas jewellery CCTV footages released
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்கள் கொண்ட இந்த கடையில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த நவ.27 ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெண்டிலேட்டர் வழியாகப் புகுந்து முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி, அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், வழக்கம் போல் நேற்று காலை கடை ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர். அப்போது நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. பின் இது குறித்து தகவல் கடை மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர தெற்கு போலீஸ் துணை ஆணையர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஏசி வெண்டிலேட்டரை கழற்றி, உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே கொள்ளை போன நகைகளின் பட்டியல் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சில சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த சிசிடிவி காட்சிகளில் வரும் நபர் தான் சந்தேகிக்கும் நபராக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவர் தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட வில்லை. சிசிடிவி காட்சிகளில் வரும் நபர் சாவகாசமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:"இது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி" - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details