தமிழ்நாடு

tamil nadu

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு - சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:58 PM IST

Paazee Forex Scam: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் சாட்சி பட்டியலில் இடம் பெற்றுள்ள 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிப்பதற்கு சம்மன் அனுப்ப கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

coimbatore cbi court orders to summon witnesses in paazee forex scam
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

கோயம்புத்தூர்: திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி, 2 கோடியே 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஐஜி பிரமோத் குமார் உட்பட ஐந்து பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.

ஆனால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல், வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், வழக்கு விசாரணையானது விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஐஜி பிரமோத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த மாதம் நவ.28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஐஜி பிரமோத் குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்கள் ஜான் பிரபாகரன், செந்தில்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, சாட்சி விசாரணைக்கான பட்டியலை டிசம்பர் 8ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய 8 பேர் கொண்ட சாட்சிகள் பட்டியலை இன்று (டிச. 8) சிபிஐ தரப்பு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் தற்போது மத்திய அரசின் செயலாளராக இருக்கும் நடராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஜி சுந்தரமூர்த்தி, அப்ரூவராக மாறிய உதவி ஆய்வாளர் சண்முகய்யா, நிதி நிறுவன அதிபர் கமலவள்ளியின் கார் ஓட்டுநர் கருணாகரன், பாசி நிறுவன கணக்காளர் மணிகண்டன், ஏ.டி.ஜி.பி பால நாக தேவி IPS, தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் IPS, ஜ.ஜி கண்ணன் IPS ஆகிய எட்டு பேருக்கும், சாட்சியளிப்பதற்கு நீதிமன்றத்தில் ஆஜராக, சம்மன் அனுப்ப கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் சாட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த 8 பேரும் வருகின்ற டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க இருக்கின்றனர்.

இதையும் படிங்க:சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details