தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை - மீறினால் சட்ட நடவடிக்கை

By

Published : Jul 20, 2023, 10:03 PM IST

கோவை புதூர் பகுதியில் அரசு உதவி பெறும் சிபிஎம் கலை கல்லூரியில் மாணவ மாணவிகள் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரியின் முதல்வர் சிங்காரவேல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

ban mobiles in cbm college
சிபிஎம் கல்லூரி வளகாத்தில் செல்போன் பயன்படுத்த தடை

கோயம்புத்தூர் : குனியமுத்தூர் அடுத்த புதூர் பகுதியில் அரசு உதவி பெறும் சிபிஎம் கலை கல்லூரியில் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என கல்லூரியின் முதல்வர் சிங்காரவேல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கைப்பேசி உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கைப்பேசி எடுத்து வர நேரிட்டால் அதனை அமைதி நிலையில் (switch off ) வைத்துக் கொள்ள வேண்டும்.

அனுமதி இன்றி செல்போனில் படம் பிடிப்பது, ஆடியோ ரெக்கார்ட் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. கல்லூரி வளாகத்திற்குள் குறும்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னால் பதிவேற்றப்பட்ட காட்சிகள், வீடியோக்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் காவல்துறையின் மூலமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்துள்ளார். அதே சமயம் பேராசிரியர்களும் வகுப்பு எடுக்கும் வேளையில் செல்போனை பயன்படுத்தக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கல்லூரி முதல்வர் சிங்காரவேலிடம் கேட்டபோது கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் கல்லூரியில் பதிவு செய்த வீடியோ காவல்துறை வரைக்கும் சென்றதாகவும்; கல்லூரிக்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் வந்திருப்பதை ஒட்டி கல்லூரி வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்த வேண்டாம் எனவும் மாணவர்களை நல்வழிப்படுத்தி, கல்வியில் அவர்களை ஊக்குவிக்கும் காரணத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும்; மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி வெளியே உலகத்தோடு பழகி பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இருப்பினும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு என சில குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துமாறு செய்யலாம் என்றும், முதலில் அவர்கள் இதை கடினமாக உணர்ந்தாலும் போகப்போக இதன் நன்மையைப் புரிந்து கொண்டு அவர்களும் இதற்கு பழக்கப்பட்டு விடுவார்கள் எனத் தெரிவித்தார்.

சிபிஎம் கலை கல்லூரியில் மாணவ மாணவிகள் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என கல்லூரியின் முதல்வரின் அறிவிப்பு மாணவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறி வரும் காலத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் ஸ்மார்ட் பாட திட்டங்கள் என பள்ளிகளிலே செல்போன் எடுத்து வரும் சூழ்நிலையில், கல்லூரியில் செல்போனை பயன்படுத்தக்கூடாது எனக் கூறியது மாணாக்கர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :ரூ.15 போதும்; 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 கி.மீ. பயணம்.. தூத்துக்குடி இளைஞர் கண்டுபிடித்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்!

ABOUT THE AUTHOR

...view details