தமிழ்நாடு

tamil nadu

பெண்கள்போல பேசி மோசடி செய்யச்சொன்னார்கள்; கம்போடியாவிலிருந்து திரும்பிய இளைஞர்கள் வேதனை

By

Published : Nov 3, 2022, 2:54 PM IST

லோன் சம்பந்தமான வேலை என அழைத்துச்சென்று, பெண்கள் போல் பேசி, பணம் பெறும் வேலையை செய்யச்சொன்னார்கள், என கம்போடியாவிலிருந்து திரும்பிய தமிழ்நாட்டு இளைஞர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவிலிருந்து திரும்பிய இளைஞர் அளித்த பேட்டி
கம்போடியாவிலிருந்து திரும்பிய இளைஞர் அளித்த பேட்டி

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை கம்போடியா நாட்டில் தகவல் தொழில் நுட்ப வேலைகளுக்கு என அழைத்துச்சென்று, சட்ட விரோத வேலைகளைச்செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி தாக்குகின்றனர். ஆகையால், அவர்களை மீட்க வேண்டும் என, இளைஞர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

முதலமைச்சர் உத்தரவின்பேரில், இந்தியத்தூதரகம் மூலமாக கம்போடியா அரசுடன் பேசி முதற்கட்டமாக 6 பேர் மீட்கப்பட்டனர். கம்போடியாவில் இருந்து தாய்லாந்து வழியாக சென்னை விமானநிலையம் வந்த 6 பேரை வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர்.

அப்போது கம்போடியாவில் வேலைக்குச்சென்ற இளைஞர்களுள் ஒருவரான நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த பரணிதரன் கூறுகையில், 'ஆயிரம் டாலர்கள் சம்பளம் எனக்கூறி ஏஜென்டுகள் எங்களை அழைத்து கம்போடியாவிற்குச்சென்றனர். அங்கு 17 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். 4 மாதங்களாக வேலை செய்தேன். ஆனால், வெறும் 100 டாலர்கள் தான் தந்தார்கள். அது சாப்பாடுக்கே செலவாகிவிட்டது. மருத்துவசெலவை கூட நானாகத் தான் செய்துகொண்டேன்.

என்னை லோன் சம்பந்தமான வேலை எனச்சொல்லி அழைத்துச்சென்றனர். ஆனால், அங்கு இன்டர்நெட் மூலம் பெண்கள் போல், பேசி பணத்தைப்பெறும் வேலையைச்செய்ய சொன்னார்கள். அதிலிருந்து தான் பணம் தருவார்கள். கம்போடியாவில் எங்களைப் போலவே நிறைய பேர் இருக்கிறார்கள்.

எங்கள் குடும்பத்தினர் புகார் செய்த 20 நாள்களில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அரசு செலவில் வீடுகளுக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.

பெண்கள்போல பேசி மோசடி செய்யச்சொன்னார்கள்; கம்போடியாவிலிருந்து திரும்பிய இளைஞர்கள் வேதனை

இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், 'தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்குச்செல்கின்றனர். கம்போடியா நாட்டிற்குச்சென்ற 6 பேரும் சொன்ன வேலை இல்லாததால் துன்புறுத்தப்படுவதாக குடும்பத்தினர் மூலமாக முதலமைச்சர் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டது. கம்போடியா நாட்டிலிருந்து வீடு செல்லும் வரை விமான கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றது.

போலி ஏஜென்டுகளை நம்பி வெளிநாடு சென்று ஏமாறாதீர்கள். வெளிநாடு செல்ல விரும்பினால் எந்த நாட்டிற்கு, என்ன வேலை என்பதை அயலக நலத்துறையில் பதிவு செய்து விட்டுச்செல்ல வேண்டும். ஆசை வார்த்தைகளை நம்பி செல்ல வேண்டாம்.

இதேபோல் குவைத் நாட்டில் 36 பேர் மீட்டு வரப்பட்டுள்ளனர். ஏஜென்டுகள் மீது புகார் செய்து உள்ளனர். உள்துறை மூலமாக விசாரித்து ஏஜென்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார். பின்னர் 6 பேரும் சொந்த ஊர்களுக்கு வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள்..!

ABOUT THE AUTHOR

...view details