தமிழ்நாடு

tamil nadu

World Liver Day 2023: கல்லீரல் நலனில் கவனம் தேவை - மருத்துவர் அறிவுரை என்ன?

By

Published : Apr 19, 2023, 10:11 AM IST

Updated : Apr 19, 2023, 10:20 AM IST

உடல் நலனை காப்பதில் கல்லீரலின் முக்கியத்துவத்தையும், கல்லீரலை காப்பதில் நாம் காட்ட வேண்டிய அக்கறையையும் உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த உலக கல்லீரல் தினத்தில் கல்லிரலின் செயல்பாடு, முக்கியத்துவம், பாதுகாப்பு, பரிசோதனைகள் குறித்து மருத்துவர் தியாகராஜன் கூறிய அறிவுரைகளை பார்க்கலாம்.

World Liver Day 2023 Tips from doctors for a healthy liver
World Liver Day 2023 Tips from doctors for a healthy liver

கல்லீரல் நலனில் கவனம் தேவை - மருத்துவர்கள் அறிவுரை என்ன?

சென்னை:மனித உடல் உறுப்புகளில் முக்கியமானதாகவும், உணவை செரிமானம் செய்வதில் முக்கியமான உறுப்பான கல்லீரலை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஏப்ரல் 19-ஆம் தேதி உலக கல்லீரல் தினம்(World Liver Day) கொண்டாடப்படுகிறது.

தற்போது நிலவும் அவசர வாழ்க்கை முறையில் உட்கொள்ளும் உணவுப் பொருட்களும் கல்லீரலை பாதித்து, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். உடல் பருமனும் கல்லீரல் நோயின் அறிகுறி என்று கூறும் மருத்துவர்கள் தமிழ்நாட்டில் கல்லீரல் அறுவை சிகிச்சையை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலவு இல்லாமல் செய்ய முடியும் என தெரிவிக்கின்றனர்.

உடலின் இரண்டாவது மிகப்பெரிய, முக்கியமான உறுப்பாக கல்லீரல் இருக்கிறது. மேலும் கல்லீரல் வளர்சிதை மாற்றம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, நச்சுகளை வடிகட்டுதல் மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள், குளுக்கோஸ் போன்றவற்றை சேமித்து வைப்பது உட்பட பல செயல்பாடுகளை செய்கிறது.

கல்லீரல் நோயினால் 60 முதல் 70 சதவீதம் வரை சேதம் அடைந்த பின்னரும், அது மீண்டும் வளருவது அதன் தனித்துவமான பண்பு, கல்லீரலில் ஏற்படும் அசாதாரணங்கள் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 2023 ஆண்டு உலக கல்லீரல் தினத்தின் கருப்பொருளாக, விழிப்புடன் இருங்கள், வழக்கமான கல்லீரல் பரிசோதனை செய்யுங்கள் என்பதாகும்.

கொழுப்பு கல்லீரல் யாரையும் பாதிக்கலாம். உடல் பருமன் (அதிக எடை), சக்கரை நோய் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற ஆபத்துக் காரணிகளைப் பொருட்படுத்தாமல், கொழுப்பு கல்லீரல் யாரையும் பாதிக்கும் என்பதால், வழக்கமான கல்லீரல் பரிசோதனையின் நடைமுறையை வலியுறுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக உடல் பருமண் நாேயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கல்லீரலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து எம்.ஜி.எம்(MGM) மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர் மருத்துவர் தியாகராஜன் கூறியதாவது, "கல்லீரல் வயிற்றின் வலது பகுதியின் மேல் பகுதியில் ஒன்றரை கிலோ அளவில் உறுப்பாக இருக்கிறது. கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து, தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது.

உடம்பில் மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேரும் நடைமுறையாகும். உடம்பின் சென்ட்ரல் பிராசஸ் யூனிட் எனவும் கல்லீரலை கூறலாம். ரத்த அழுத்ததை வயிற்றில் கட்டுப்படுத்துகிறது. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அளித்தல் உள்ளிட்ட பல செயல்களை கல்லீரல் செய்கிறது.

கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வதற்கு, மது அருந்த கூடாது. ஆல்ஹாகல் எடுப்பவர்களும் ஒரு நாளைக்கு 30 மில்லி அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அது சாத்தியப்படாது. தொடர்ந்து மது அருந்துபவர்கள் கட்டாயம் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். காபி அருந்துவது நல்லது. உடல் பயிற்சி செய்ய வேண்டும். புரோட்டின், ஸ்டீராய்டு போன்றவற்றை எடுக்கக்கூடாது. மாத்திரைகளையும் அதிக நாட்கள் கல்லீரல் பரிசோதனை செய்யாமல் எடுத்தால் பாதிக்கப்படும்.

கல்லீரலின் பாதிப்பிற்கான அறிகுறிகளாக, வயிறு வீக்கம், கால்வீக்கம், ரத்த வாந்தி எடுத்தல், மஞ்சள் காமாலை, மயக்கம் அதிகமாக இருப்பது, உடல் சோர்ந்து போவது, சிறுநீரகம் கழிப்பதில் பிரச்சனை போன்றவையும் அறிகுறியாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

கல்லீரல் பாதிப்பிற்கு ஏற்ப மருந்து எடுத்துக் கொண்டு சிகிச்சையை தொடரலாம். நோயின் தீவிரம் அதிகளவில் இருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். தற்பொழுது உயிருடன் இருப்பவரிடம் இருந்தும் கல்லீரல் பெற்று செய்யலாம். இறந்தவரின் உடல் உறுப்பு தானம் பெற்றும் செய்யலாம். ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. அதிகளவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுத் தேவைப்படுகிறது.

மேலும் உயிருடன் இருப்பவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தானமாக அளித்தாலும், தானம் அளித்தவருக்கு 6 வாரங்களில் கல்லீரல் மீண்டும் வளர்ச்சி அடைந்து விடும். மேலும் தமிழ்நாட்டில் ஆண்டு தாேறும் 500 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எம்ஜிஎம் மருத்துவமனையில் மட்டும் 100 பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மேலும் இதற்கான நிதி இல்லாவிட்டாலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம், தன்னார்வலர்களின் நிதியுதவி உடன் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. மனிதனுக்கு உடல் பருமன், வயிறு பருமன் போன்றவை ஏற்படும் போது, கொழுப்பு கல்லீரல் உருவாகி அதனால் பாதிப்பு ஏற்படும். எனவே உடற்பயிற்சி செய்து கல்லீரலை பாதுகாப்போம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்.. பீர் வேண்டாம் மோர் குடிங்க.. மருத்துவர்கள் கூறும் சம்மர் டிப்ஸ்!

Last Updated : Apr 19, 2023, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details