தமிழ்நாடு

tamil nadu

மகளிர் உரிமைத் தொகைத் திட்டப்பதிவு... வந்தது இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பணி!

By

Published : Jul 10, 2023, 5:15 PM IST

கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு, இல்லம் தேடி பணியாளர்களைப் பதிவு செய்யும் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம்
கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம்

சென்னை:2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தின் போது தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என பல்வேறுத் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதிநிலை தாக்கலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மகளில் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு, 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' எனப் பெயரிட்டுள்ளார். மேலும் உரிமைத்தொகை திட்டம் குறித்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

திட்டத்திற்கான சிறப்பு அலுவலர் இளம்பகவத்தின் கடிதம்

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் பகுதியில் வசிக்கின்றனர் என்ற விவரங்கள் மாநில அலுவலகத்தில் இருந்து அளிக்கப்படும். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் எந்தவித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம்.

ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், நியாய விலைக் கடைகளில் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தைப் பெற சிறப்பு முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும், விருப்பம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்யப்படுவர்.

விருப்பம் இல்லாத தன்னார்வலர்கள் விண்ணப்பப் பதிவுக்கு பயன்படுத்தக்கூடாது. தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கலாம். நியாய விலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details