தமிழ்நாடு

tamil nadu

சட்டப்பேரவையில் நாக்கை துருத்தினாரா விஜயகாந்த்? 2012-ம் ஆண்டு நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 8:55 PM IST

Vijayakanth: கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததும், சிறிது சிறிதாக துவங்கிய மோதல் ஒரு நாள் சட்டமன்ற நிகழ்வுடன் முடிவுக்கு வந்ததும் நினைவிருக்கலாம். அன்றைய நாளில் நடந்த வாக்குவாதம் என்னவென்பது குறித்த முழு விவரத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Vijayakanth angry speech in Assembly against Jayalalitha
சட்டப்பேரவையில் நாக்கை துருத்திய விஜயகாந்த்

சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்றதோடு, எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

கூட்டணிக் கட்சிகளாக இருந்தபோதும், இரு கட்சிகளிடையே சிறிது சிறிதாக பூசல் எழுந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு சட்டப்பேரவை நிகழ்வின்போது, இந்த மோதல் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்தது.

சட்டப்பேரவையில் என்ன நடந்தது?பால்விலை உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் பால் விலையை ஏன் உயர்த்தினீர்கள், தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்பதாலா என்ற தொனியில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்க எழுந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பால் விலை உயர்வுக்கான காரணங்களை அடுக்கியதோடு, தேர்தலுக்காக காத்திருக்கவில்லை என விளக்கும் வகையில், வரவிருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக தனித்து வேட்பாளரைக் களமிறக்கும். உங்களுக்குத் திராணியிருந்தால் தேமுதிக தனித்து வேட்பாளரைக் களமிறக்கத் தயாரா? என்றும் ஒரு கேள்வியை முன் வைத்தார்.

கூட்டணியில் இருக்கும் கட்சியை தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள் என ஜெயலலிதா கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்க எழுந்தார், விஜயகாந்த். ஆளும்கட்சியாக இருப்பவர்கள் எப்படி ஜெயிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும், இப்போது அதில் சவால் விட வேண்டிய அவசியம் இல்லை எனவும் விஜயகாந்த் கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என ஜெயலலிதா பேசினார். மீண்டும் எழுந்த விஜயகாந்த், இம்முறை கொஞ்சம் சூடாகவே தனது வாதத்தைத் துவங்கினார். "தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை, கேட்டதற்கு மட்டும்தான் பதில், பால் விலை பற்றிக் கேட்டதற்கு மட்டும்தான் பதில் வேண்டும், சங்கரன்கோவில் இருக்கட்டும், பென்னகரத்தில் ஏன் தோற்றீர்கள்?" என அதிமுகவைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

மின்னணு வாக்கு எந்திரத்தில் தவறு இருப்பதாக அனைவருமே நீதிமன்றத்தை நாடினார்கள் என விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்த போதே, சபாநாயகர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டார். இதனால் பொறுமை இழந்த தேமுதிகவினர், சலசலப்பில் ஈடுபடத் துவங்கினர். இதற்குள்ளாகவே அதிமுக தரப்பிலிருந்தும் எம்எல்ஏக்கள் பேசிய நிலையில், இந்த நடவடிக்கைகள் அவைக்குறிப்பில் இடம் பெறாத கூச்சல் குழப்பமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் இருந்த வரிசையை நோக்கி விஜயகாந்த் நாக்கைத் துருத்திய நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் தேமுதிகவினர் கூண்டோடு சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ‘என்ன பிரச்னை செய்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே முதலமைச்சர் தேர்தலில் தோற்ற வரலாறு ஜெயலலிதாவுடையதுதான்’ என பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோற்றதை நினைவு கூர்ந்தார்.

பர்கூர் தொகுதியில் நடந்தது என்ன? கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் நடைபெற்ற அந்த தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றது. மாறாக அதிமுக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பர்கூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

பென்னாகரம் இடைத் தேர்தல்: கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற பென்னாகரம் இடைத் தேர்தலில், அந்த கட்சியின் வேட்பாளர் இன்ப சேகரன் வெற்றி பெற்றார். ஆனால், இதற்குப் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத்தான் இடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதாவை நோக்கி நாக்கை துருத்தினாரா? ஜெயலலிதாவை நோக்கி விஜயகாந்த் நாக்கை துருத்தியதாக இன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நிலையில், இதில் உண்மை இல்லை என்கிறார் அப்போது எம்எல்ஏவாக இருந்தவரும், விஜயகாந்த்தின் நண்பருமான ராதா ரவி.

இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், ஜெயலலிதாவின் பின் வரிசையிலிருந்த எம்எல்ஏ ஒருவரை நோக்கித்தான் விஜயகாந்த் நாக்கை துருத்தியதாகவும், கூச்சல் குழப்பத்திற்கு நடுவே தனிப்பட்ட விமர்சனத்தால் விஜயகாந்த் ஆவேசமானதாக தன்னிடம் பகிர்ந்து கொண்டார் என ராதா ரவி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ABOUT THE AUTHOR

...view details