தமிழ்நாடு

tamil nadu

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் மருத்துவ முகாம்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:47 AM IST

Vijay Makkal Iyakkam conducts medical camps: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் டிச.14-ஆம் தேதி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தளபதி சொல்லுக்கிணங்க சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள்
தளபதி சொல்லுக்கிணங்க சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள்

சென்னை:மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் தொடர்ந்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நிலையில் மக்கள் மருத்துவம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

தற்போது வரை இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வெளியேறாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள், படகில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி சூழ்ந்து கொண்டு வெளியேறாமல் இருப்பதால், மக்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், வெள்ளத்தால் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் சென்னை மக்களுக்கு அரசாங்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து, சின்னத்திரை நடிகர்களும் உதவிகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: மழை நின்று ஒரு வாரமாகியும் வடியாத வெள்ள நீர்.. பூந்தமல்லியில் படகில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்!

இதைத் தொடர்ந்து தற்போது புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில் காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களைத் தடுக்கும் நோக்கில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் நடக்க உள்ள இந்த முகாமில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாம் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த இலவச மருத்துவ முகாமானது, வருகின்ற 14-ஆம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதால், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன்” - ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details