தமிழ்நாடு

tamil nadu

மோடி அரசை பதவி விலக வலியுறுத்தும் திருமாவளவன்

By

Published : Sep 27, 2021, 2:01 PM IST

மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

thol
thol

திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கட்சித் தலைவர்கள் கைது

மேலும் இதில் பொதுத் துறையைத் தனியாருக்கு விற்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்வதற்கு முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் செய்தியாளருக்குப் பேட்டியளித்தனர்.

போராட்டங்கள் தீவிரமாகும்

முதலில் பேசிய பாலகிருஷ்ணன், "ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி உழவர்களுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாலை மறியல் போராட்டம் இங்கு நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று ஒன்றிய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பத் பெற ஒன்றிய அரசு தாமதித்தால் போராட்டங்கள் தீவிரமாகும் என்று மோடி அரசுக்கு எச்சரிக்கைவிடுக்கின்றோம்" எனக் கூறினார்.

மோடி அரசு பதவி விலக வேண்டும்

அடுத்து பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், "மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

மக்கள் நிறுவனத்திற்கு எதிரான கொள்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், சிஐடியு தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் என திமுக தலைமையிலான அமைப்புகளின் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொமுச தொழிற்சங்கப் பொருளாளர் நடராஜன், "மோடி அரசின் விவசாய விரோத மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று திமுக கூட்டணியின் கட்சிகள், அமைப்புகள் சார்பாக மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது.

இந்திய நாட்டை கூறுபோட்டு விற்கும் மோடி அரசு அனைத்துச் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: பாரத் பந்த் காரணமாக தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details